கோம்பையில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் பாம்புகள் புகும் அவலம் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகள் பீதி

கோம்பையில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் பாம்புகள் புகுவதால் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகள் பீதியடைந்துள்ளனர்.

Update: 2017-08-05 22:30 GMT

உத்தமபாளையம்,

உத்தமபாளையத்தை அடுத்த கோம்பையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கோம்பை, பல்லவராயன்பட்டி, பண்ணைப்புரம், மேலச்சிந்தலைச்சேரி உள்ளிட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தினந்தோறும் வெளிநோயாளிகளாக 200–க்கும் மேற்பட்டவர்கள் வந்து சிகிச்சை பெற்றனர். ஆனால் தற்போது வெளிநோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதே போல் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கையும் குறைந்து உள்ளது.

காரணம் சுகாதாரநிலையத்தின் கட்டிடம் சேதம் அடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் சுகாதார நிலைய வளாகத்துக்குள் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் கட்டிடத்துக்குள் பாம்புகள் அவ்வப்போது புகுந்து விடுகிறது. சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகள் பாம்புகளை பார்த்து பீதியடைந்து உள்ளனர். இந்த வளாகத்துக்குள் செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளது. அவற்றில் சேதம் அடைந்த கட்டிடங்கள் பூட்டியே கிடக்கின்றன.

இந்த சுகாதார நிலையத்தில் டாக்டர் உள்பட மொத்த அலுவலர்கள் 68 பேர் பணியில் உள்ளனர். ஆனால் அவர்கள் எண்ணிக்கை அளவுக்கு கூட நோயாளிகள் சிகிச்சைக்கு வருவது இல்லை. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் சுகாதார நிலையத்தை மூடவேண்டும்.

எனவே இந்த பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு சேதம் அடைந்த கட்டிடத்தை சீரமைக்கவேண்டும். மேலும் பாம்புகள் புகுவதை தடுக்க முட்புதர்களையும், காய்ந்த இலைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்