குச்சனூர் கோவிலுக்கு வந்த போது பரிதாபம்: முல்லைப்பெரியாற்றில் குளித்த மாணவன் மூழ்கி பலி
தாத்தா–பாட்டியுடன் குச்சனூர் கோவிலுக்கு வந்த மாணவன் முல்லைப்பெரியாற்றில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி பலியானான்.;
சின்னமனூர்,
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவருடைய மகன் சிபிராஜ் (வயது 12). இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வந்தான். ஆடி 3–வது சனிக்கிழமையான நேற்று மதிய வேளையில் தனது தாத்தா முத்துக்கிருஷ்ணன் மற்றும் பாட்டியுடன் சிபிராஜ் குச்சனூர் சனீஸ்வரர் கோவிலுக்கு வந்தான். கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுரபி நதியில் நீராடி பின்னர் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் சுரபி நதியின் கரைப்பகுதியில் தற்போது கட்டுமான பணிகள் நடப்பதால் கோவில் அருகே உள்ள முல்லைப்பெரியாற்றில் பக்தர்கள் நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் சிபிராஜூம் தனது தாத்தா–பாட்டியுடன் ஆற்றில் குளிக்க சென்றான். கரைப்பகுதியில் குளித்துக்கொண்டிருந்த சிறுவன் திடீரென நீரில் மூழ்கி மாயமானான். இதனால் பதற்றமடைந்த அவருடைய தாத்தாவும், பாட்டியும் கூச்சல் போட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் ஆற்றில் இறங்கி மாணவனை தேடினர்.
ஆனால் அவர்களால் சிபிராஜை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து சின்னமனூர் தீயணைப்புத்துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 4 மணி நேர தேடலுக்கு பின்னர் மாணவனின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். பின்னர் அவனுடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோவிலுக்கு வந்த போது தண்ணீரில் மூழ்கி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.