மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்து கோவா முதல்–மந்திரியை சந்தித்து பேச முடிவு எடியூரப்பா பேட்டி

பெங்களூருவில் நேற்று பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Update: 2017-08-05 21:16 GMT

பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மகதாயி நதிநீர் பிரச்சினை கர்நாடகம், கோவா, மராட்டியம் ஆகிய மாநிலங்களுக்கு இடையே உள்ளது. வடகர்நாடகத்தில் கடும் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இதற்காக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக வடகர்நாடகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதனால் மகதாயி நதிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண வேண்டியது அவசியமாகும். இதற்கான அனைத்து முயற்சிகளையும் பா.ஜனதா எடுத்து வருகிறது.

முதற்கட்டமாக கோவா மாநில முதல்–மந்திரி மனோகர் பாரிக்கரை சந்தித்து பேச முடிவு செய்துள்ளேன். என்னுடன் பா.ஜனதா எம்.பி.க்கள். வடகர்நாடகத்தை சேர்ந்த விவசாயிகள், முக்கிய பிரமுகர்களை அழைத்து செல்ல உள்ளேன்.

மகதாயி நதிநீர் பிரச்சினை தொடர்பாக இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம்(செப்டம்பர்) முதல் வாரம் கோவா முதல்–மந்திரியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும். மந்திரி டி.கே.சிவக்குமார் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை சட்டத்திற்கு உட்பட்டே நடந்துள்ளது. வருமான வரி சோதனையில் இருந்து மீண்டு வருவதற்கான சக்தி டி.கே.சிவக்குமாரிடம் உள்ளது. அதுபற்றி வேறு எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்