சாலையோரம் ஆண் நபர் கொலை செய்யப்பட்டு கிடந்த வழக்கில் மைத்துனரே கூலிப்படையை ஏவி கொன்றது அம்பலம்

முல்பாகல் அருகே, சாலையோரம் ஆண் நபர் கொலை செய்யப்பட்டு கிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Update: 2017-08-05 21:10 GMT

கோலார் தங்கவயல்,

முல்பாகல் அருகே, சாலையோரம் ஆண் நபர் கொலை செய்யப்பட்டு கிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சொத்து தகராறில் அவரை, அவருடைய மைத்துனரே கூலிப்படையை ஏவி கொன்றது போலீசாரின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இவ்வழக்கில் தற்போது மைத்துனர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

கொலை செய்யப்பட்டு கிடந்தார்

கோலார் மாவட்டம் முல்பாகல் அருகே கப்பலமடகு கிராமத்தை அடுத்த சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், கடந்த மாதம்(ஜூலை) 21–ந் தேதி சாலையோரமாக 34 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து முல்பாகல் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் பெங்களூரு டவுன் கே.ஆர்.புரம் ராமமூர்த்திநகர் கல்கெரே பகுதிக்கு உட்பட்ட என்.ஆர்.ஐ. விரிவாக்க காலனியைச் சேர்ந்த வசந்தகுமார்(வயது 34) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மைத்துனர்

மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதாவது, வசந்தகுமாரின் தங்கையின் கணவர்(மைத்துனர்) லட்சுமிகாந்த். இவரும் பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்தவர்.

இவர் அப்பகுதியில் ஏலச்சீட்டு மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். அதில் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வசந்தகுமாரை சந்தித்து தனக்கு பண உதவி செய்யுமாறும், தனது மனைவிக்கு சேர வேண்டிய சொத்தில் இருந்து சிறிது பகுதியை உடனே பிரித்துக் கொடுக்குமாறும் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு வசந்தகுமார் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் சொத்து தகராறு ஏற்பட்டது.

ரூ.75 ஆயிரம் பேரம்

இதனால் ஆத்திரம் அடைந்த லட்சுமி காந்த், வசந்த குமாரை கொலை செய்ய திட்டமிட்டார். அதற்காக அவர் பெங்களூருவைச் சேர்ந்த மகேஷ் குமார்(33) என்பவருடைய தலைமையிலான கூலிப்படையை நாடினார். அவர்கள் கொலை செய்வதற்காக ரூ.75 ஆயிரம் பேரம் பேசினர். அந்த பணத்தை கொடுப்பதற்கு லட்சுமிகாந்த் ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் முன்தொகையாக ரூ.25 ஆயிரத்தையும் அவர்களிடம் கொடுத்தார்.

பின்னர் சம்பவத்தன்று லட்சுமி காந்த், வசந்தகுமாரை சந்தித்து கோலார் வரை சென்று வரவேண்டிய வேலை உள்ளது, அதனால் தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அதன்பேரில் வசந்தகுமாரும், லட்சுமிகாந்த்துடன் கோலாருக்கு புறப்பட்டார். அவர்கள் ஒரு காரில் கோலார் நோக்கி சென்றனர். காரை லட்சுமிகாந்த் ஓட்டினார்.

திட்டமிட்டபடி...

அப்போது மகேஷ் குமார் தலைமையில் கொன்னே குமார், டோம்னிக் ஆகியோர் அடங்கிய கூலிப்படையினர் ஒரு மோட்டார் சைக்கிளில் அவர்களுடைய காரை பின்தொடர்ந்து சென்றனர். திட்டமிட்டபடி கோலார் மாவட்டம் முல்பாகல் அருகே கப்பலமடகு கிராமத்தை அடுத்த சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சென்று கொண்டிருந்தபோது திடீரென லட்சுமி காந்த் காரை சாலையோரம் நிறுத்தினார்.

அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த கூலிப்படையினர், வசந்தகுமாரை சரமாரியாக தாக்கி, கத்தியால் குத்தியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தனர். பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லட்சுமி காந்த்தையும், மகேஷ் குமாரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கூலிப்படையினர் கொன்னே குமார், டோம்னிக் ஆகியோரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்