மண்டியா மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் முன்பு கொசு வலையை மூடிக்கொண்டு ஐக்கிய ஜனதாதளம் தலைவர் போராட்டம்

மண்டியா மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் முன்பு ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் கொசு வலையை மூடிக் கொண்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2017-08-05 21:03 GMT

மண்டியா,

டெங்கு, மலேரியா நோய்கள் பரவுவதை தடுக்க வலியுறுத்தி நேற்று மண்டியா மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் முன்பு ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் கொசு வலையை மூடிக் கொண்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கொசு வலையை மூடிக்கொண்டு...

மண்டியா மாவட்டத்தில் டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா உள்பட பல நோய்கள் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய்களுக்கு இதுவரை மாவட்டத்தில் 30 பேர் இறந்துள்ளனர். டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவுவதை தடுக்க மாவட்ட பஞ்சாயத்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. மேலும், அரசு ஆஸ்பத்திரிகளிலும் இந்த நோய்களுக்கான மருந்துகள் போதிய அளவு இருப்பு இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை, மண்டியா மாவட்ட ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் கவுடா, தனது உடலை கொசு வலையால் மூடிக் கொண்டு வந்து திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் தனது கையில் டெங்கு, மலேரியா நோய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதப்பட்ட பதாகையும் ஏந்தியிருந்தார்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் அவர், கொசு வலையை மூடிக் கொண்டு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தின் முன்பாக கோ‌ஷங்களை எழுப்பியப்படி சுற்றினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மண்டியா மாவட்டத்தில் டெங்கு, மலேரியா உள்பட ஏராளமான நோய்கள் பரவி வருகிறது. இதனை தடுக்க மாவட்ட பஞ்சாயத்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நோய்கள் பரவுவதை தடுப்பதில் மாவட்ட பஞ்சாயத்து தோல்வி அடைந்துள்ளது. இதுவரை மண்டியா மாவட்டத்தில் டெங்கு மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய்களுக்கு 30 பேர் இறந்துள்ளனர். இந்த நோய்களுக்கு சரியான மருந்து கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் டெங்கு, மலேரியா போன்ற நோய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றார். இதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

மேலும் செய்திகள்