வெவ்வேறு விபத்துகளில் கார் டிரைவர் உள்பட 3 பேர் சாவு

திருச்சியில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் கார் டிரைவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

Update: 2017-08-05 22:15 GMT
திருச்சி,

திருச்சி எடமலைப்பட்டி புதூர் துளசிங்கநகரை சேர்ந்தவர் அஸ்லாம்(வயது 36). கார் டிரைவர். இவர் வேலைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். எடமலைப்பட்டி புதூர் மெயின்ரோடு ராமச்சந்திரா நகரில் வந்தபோது சாலையின் குறுக்கே ஒரு மாடு சென்றது. மாட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக அஸ்லாம் திடீரென்று பிரேக் பிடித்தார். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் அஸ்லாம் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த அஸ்லாமுக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி இ.பி.ரோட்டை சேர்ந்தவர் சண்முகம்(51). இவர் தில்லைநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணி புரிந்து வந்தார். நேற்று முன்தினம் பணி முடிந்து சண்முகம் வீட்டிற்கு செல்வதற்காக தனது சைக்கிளில் புறப்பட்டார். இ.பி.ரோடு பகுதியில் உள்ள ஒரு திரையரங்கம் அருகே சென்றபோது சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சண்முகம் படுகாயமடைந்தார். இதனை கண்ட அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சண்முகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் மேலூர் கீழத்தெருவை சேர்ந்த மனோகர் மகன் லோகேஷ்(22). எலக்ட்ரீசியன். இவர் சம்பவத்தன்று இரவு மேலூர் மெயின்ரோட்டில் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை லோகேஷ் ஓட்ட, பின்னால் அவரது நண்பர் அமர்ந்திருந்தார். திடீரென்று லோகேஷ் பிரேக் பிடித்ததால், மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதில் 2 பேரும் கீழே விழுந்தனர். இதில் லோகேஷ் படுகாயமும், அவரது நண்பர் லேசான காயமும் அடைந்தனர். அவ்வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக லோகேஷ் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்