ராட்சத அலையில் சிக்கி கடலில் படகு கவிழ்ந்தது; மீனவர் மாயம்

ராட்சத அலையில் சிக்கி கடலில் படகு கவிழ்ந்ததில் சென்னையை அடுத்த கொட்டிவாக்கம் குப்பத்தை சேர்ந்த மீனவர் மாயம்.

Update: 2017-08-05 21:45 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த கொட்டிவாக்கம் குப்பத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 35). மீனவரான இவர், நேற்று அதிகாலை கொட்டிவாக்கம் குப்பத்தை சேர்ந்த சக மீனவர்களான சங்கர், மணிகண்டன், சிவகுமார் ஆகியோருடன் கடலில் மீன்பிடிக்க பைபர் படகில் சென்றார். கரையில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் கடலுக்குள் சென்றபோது ராட்சத அலையில் சிக்கிய பைபர் படகு, தலை குப்புற கவிழ்ந்தது.

படகில் சென்ற ஜானகிராமன் உள்பட 4 மீனவர்களும் கடலில் மூழ்கினர். இதில் சங்கர், மணிகண்டன், சிவகுமார் ஆகிய 3 பேரும் கடலில் நீந்தி கரைக்கு வந்து சேர்ந்தனர். ஆனால் ஜானகிராமன் மட்டும் மாயமானார்.

பைபர் படகு கடலில் கவிழ்ந்த போது ஜானகிராமனுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி கொட்டிவாக்கம் மீனவர்களுக்கும், நீலாங்கரை போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசாரும், மீனவர்களும் 5-க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்குள் சென்று மாயமான மீனவர் ஜானகிராமனை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

ஜானகிராமனுக்கு தலையில் அடிபட்டதால் அவர் கடலில் மூழ்கி பலியானாரா?. கடல் அலையில் சிக்கி வேறு எங்காவது கரை ஒதுங்கி விட்டாரா? என போலீசார் தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்