எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அக்டோபர் மாதம் 4-ந் தேதி நடக்கிறது அமைச்சர் ஆய்வு

கரூர் திருமாநிலையூரில் அக்டோபர் மாதம் 4-ந் தேதி நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான இடத்தை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2017-08-05 22:45 GMT
கரூர்,

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாவட்டந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. கரூரில் அக்டோபர் மாதம் 4-ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. விழா நடத்த திருமாநிலையூரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நேற்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். ஆய்வின் போது அவர் கூறியதாவது:-

கரூரில் அக்டோபர் மாதம் 4-ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேச உள்ளார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ- மாணவிகளுக்கான வினாடி-வினா கருத்தரங்கம், மனோதத்துவ அறிவு புகட்டும் நிகழ்ச்சிகள், பெண்களுக்கான தன்னம்பிக்கை ஊட்டும் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. பயனாளிகளுக்கு அனைத்து அரசு துறையின் வாயிலாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. விழாவில் பொதுமக்கள் பங்கேற்க ஏதுவாக திருமாநிலையூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த விழாவில் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது கலெக்டர் கோவிந்தராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், உதவி கலெக்டர் சரவணமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், அ.தி.மு.க. அம்மா அணி அவை தலைவர் காளியப்பன், நகர செயலாளர் நெடுஞ்செழியன், கரூர் தாசில்தார் சக்திவேல் உள்பட பலர் இருந்தனர். 

மேலும் செய்திகள்