ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்காவில் மரம் விழுந்து கண்ணாடி மாளிகை சேதம்

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மரம் விழுந்து கண்ணாடி மாளிகை சேதமடைந்தது.

Update: 2017-08-05 22:30 GMT
ஊட்டி,

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இத்தாலியன் பூங்காவுக்கு மேல்பகுதியில் கண்ணாடி மாளிகை உள்ளது. இந்த கண்ணாடி மாளிகை கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 277 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு வெளிநாடுகளில் நிலவும் தட்பவெப்பநிலையில் வளரக்கூடிய லில்லியம், பால்சம் உள்ளிட்ட அழகு மலர் செடிகள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணியளவில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. அப்போது பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தாவரவியல் பூங்காவில் இருந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த ஒரு மரம் முறிந்து கண்ணாடி மாளிகையின் மீது விழுந்தது.

பூங்கா ஊழியர்கள் மதிய உணவு சாப்பிட சென்றிருந்ததால், கண்ணாடி மாளிகையில் யாருமில்லை. அதன் காரணமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் கண்ணாடி மாளிகையின் ஒரு பகுதியின் சுவர் மற்றும் மேல்பகுதியில் உள்ள கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தது. மேலும் மாளிகையின் உள்பகுதியில் கண்ணாடிகள் உடைந்து சிதறி கிடந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த பூங்கா ஊழியர்கள் கண்ணாடி மாளிகையின் மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் அங்குள்ள மலர் பூந்தொட்டிகளை பாதுகாப்பாக மற்ற இடங்களிலும் அடுக்கி வைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இதேபோல் ஊட்டியில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக கடுங்குளிர் நிலவுகிறது. தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் என பலர் ரோட்டோரத்தில் தீயை மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்