மதுராந்தகம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

மதுராந்தகம் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். காப்பாற்ற முயன்ற அவரது தந்தையும் உடல் கருகி உயிரிழந்தார்.

Update: 2017-08-05 22:15 GMT
மதுராந்தகம், 

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த அவிரிமேட்டை சேர்ந்தவர் சேகர்(வயது 62). இவரது மகள் நந்தினிக்கும்(29) மதுராந்தகத்தை சேர்ந்த தாமோதரன் என்பவருக்கும் திருமணம் நடந்து 2 குழந்தைகளும் உள்ளனர்.

நேற்று முன்தினம் சேகர் தனது மகள் நந்தினி வீட்டுக்கு சென்றார். இருவருக்கும் நிலம் சம்பந்தமாக ஏற்கனவே தகராறு இருந்து வந்தது.

நேற்று முன்தினமும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் விரக்தியடைந்த நந்தினி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதில் உடலில் தீப்பிடித்து அலறினார்.

2 பேரும் உயிரிழப்பு

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சேகர் மகளை காப்பாற்ற முயன்றார். இதனால் அவரது உடலிலும் தீப்பிடித்தது. இருவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நந்தினியும் சேகரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்