கடல் பகுதியில் சந்தேகப்படும் படியான நபர்கள் தென்பட்டால் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்

கடல்பகுதியில் சந்தேகப்படும் படியான நபர்கள் தென்பட்டால் காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் கூறினார்.;

Update: 2017-08-05 23:00 GMT
கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டினம் கடற்கரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மபடகு ஒன்று கரை ஒதுக்கியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த படகினை கடலோர காவல்குழுமத்தினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது சம்பந்தமாக கோட்டைப்பட்டினத்தில் காவல் துறையினர் மற்றும் கடலோர காவல் குழுமத்தினர் சார்பாக மீனவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

காவல்துறையோ, கடலோர காவல் குழுமத்தினரோ 24 மணி நேரமும் கடல் பகுதியில் கண்காணித்து கொண்டிருக்க முடியாது. மீனவர்கள் நீங்கள் தான் காக்கி சட்டை போடாத காவல் துறையினர். கடல் பகுதியில் நடக்கும் கடத்தல், வெளிநாட்டவர் அனுமதியின்றி உள்ளே நுழைதல் போன்றவற்றை தடுத்து நிறுத்தும் பொறுப்பு உங்களுக்கும் உண்டு. மேலும் கடல் பகுதியில் சந்தேகப்படும் படியான நபர்கள் யாராவது தென்பட்டால் உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு காமராஜ், கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ், கோட்டைப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் கடலோர காவல் குழுமத்தினர், விசைப்படகு சங்க நிர்வாகிகள், நாட்டுப்படகு சங்க நிர்வாகிகள், வர்த்தக சங்கத்தினர், ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கோட்டைப்பட்டினம் கடைவீதியில் உள்ள செக்போஸ்டில் வர்த்தக சங்கம் சார்பாக கண் காணிப்பு அறையின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலந்து கொண்டு கண்காணிப்பு அறையை திறந்து வைத்தார். 

மேலும் செய்திகள்