ரூ.12 லட்சத்தில் பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி எம்.எல்.ஏ. பார்வையிட்டார்

திருவெண்காடு அருகே ரூ.12 லட்சத்தில் பள்ளியில் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியை பாரதி எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

Update: 2017-08-05 22:45 GMT
திருவெண்காடு,

திருவெண்காடு அருகே உள்ள திருக்காட்டுப்பள்ளி அரசினர் தொடக்கப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12 லட்சத்தில் இரு வகுப்பறை கட்டிடம் மற்றும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தில் சமையல் கூடம் ஆகிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டுமானப்பணிகளை பாரதி எம்.எல்.ஏ. நேற்று காலை பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கடந்த ஆண்டு திருக்காட்டுப்பள்ளி, வேதராஜபுரம் உள்ளிட்ட நான்கு அரசுப்பள்ளிகளுக்கு ரூ.48 லட்சம் செலவில் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன்படி தற்போது பள்ளி கட்டிட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் சீர்காழி தொகுதியில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என தொகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தமிழக முதல்- அமைச்சர் கல்லூரி அமைத்திட ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து சீர்காழி புத்தூரில் அரசு கல்லூரி தொடங்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகின்றன. வரும் கல்விஆண்டில் அரசு செவிலியர் கல்லூரியை சீர்காழி தொகுதியில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.

அவருடன் ஒன்றிய பொறியாளர் கனகராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் நெடுஞ்செழியன், கட்சி நிர்வாகிகள் திருமாறன், மனோகரன், அமிர்தலிங்கம், ஒப்பந்ததாரர் அகோரம் ஆகியோர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்