தமிழகம், புதுச்சேரியில் வக்கீல்கள் 2 நாட்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

தமிழகம், புதுச்சேரியில் வக்கீல்கள் 2 நாட்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவதென மாநில பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.;

Update: 2017-08-05 23:00 GMT
சேலம்,

தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் எஸ்.கே.வேல் தலைமை தாங்கினார். செயலாளர் செல்ல.ராசாமணி, பொருளாளர் காமராஜ், இணை செயலாளர் வக்கீல் தமிழரசன் எம்.எல்.ஏ., துணைத்தலைவர்கள் மாரப்பன், கார்த்திகேயன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சேலம் வக்கீல்கள் சங்க தலைவர் பொன்னுசாமி, செயலாளர் கே.ஆர்.ஆர்.அய்யப்பமணி, மூத்த வக்கீல்கள் மூர்த்தி, பொன்.ரமணி, முன்னாள் பார்கவுன்சில் தலைவர் சந்திரமோகன் உள்பட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கூட்டமைப்பின் தலைவர் எஸ்.கே.வேல் கூறியதாவது:-

வக்கீல்கள் சட்டம் 1961-ல் சில திருத்தங்களை மத்திய சட்ட ஆணையம் கொண்டுவர உள்ளது. இத்திருத்தமானது வக்கீல்களின் அடிப்படை உரிமைக்கும், பாதுகாப்பிற்கும், தொழிலுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகிற வகையில் அமைந்துள்ளதால் இந்த சட்டத்திருத்தத்தை முழுமையாக ஏற்க கூடாது என வலியுறுத்தி இருக்கிறோம். நீதிபதிகளின் பதவிக்கான தேர்வை தேசிய அளவில் நடத்துவது என்ற மத்திய அரசின் முடிவிற்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, அந்த புதிய நடைமுறையை திரும்பபெற மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்யும் சமயத்தில் மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரியும் மூத்த வக்கீல்களின் பெயரையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். வக்கீல்களின் சேமநல நிதி ரூ.5 லட்சத்து 25 ஆயிரத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்திட வேண்டும் என தமிழக முதல்-அமைச்சரையும், பார்கவுன்சிலையும் வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் நடந்துவரும் வக்கீல்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை கேட்டுக்கொண்டுள்ளோம். கள்ளக்குறிச்சியில் 2 வக்கீல்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி காவல்துறையை கேட்டுகொண்டுள்ளோம். கூட்டமைப்பின் அனைத்து தீர்மானங்களையும் வலியுறுத்தும் வகையில் வருகிற 10, 11-ந் தேதி ஆகிய 2 நாட்கள் தமிழகம், புதுச்சேரியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்