கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவிகள் பரிதாப சாவு

ஆரணி அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவிகள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2017-08-05 23:30 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வேல்முருகன், கூலி தொழிலாளி. இவரது மகள்கள் கோட்டீஸ்வரி (வயது 14), தர்ஷினி (12). கோட்டீஸ்வரி ஆரணி மகளிர் மேல்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பும், தர்ஷினி 7-ம் வகுப்பும் படித்து வந்தனர். இவர்களின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் குணசீலன் மகள் சரண்யாகுமாரி (16), 10-ம் வகுப்பு படித்துள்ளார். கோட்டீஸ்வரி, தர்ஷினி, சரண்யாகுமாரி ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதையை கழிக்க வீட்டின் அருகில் உள்ள கல்குவாரி குட்டையான பாறைகுளத்துக்கு சென்றனர்.

அப்போது கால் தவறி தர்ஷினியும், சரண்யாகுமாரியும் கல்குவாரி குட்டையில் விழுந்து தண்ணீரில் மூழ்கினர். இதனை பார்த்த கோட்டீஸ்வரி குட்டையில் குதித்து தண்ணீரில் மூழ்கிய 2 பேரையும் தேடினார். சுமார் 1½ மணி நேரம் கழித்து தர்ஷினியை மட்டும் பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். இந்த நிலையில் மாணவிகள் கல்குவாரி குட்டையில் மூழ்கிய தகவல் கிடைத்ததும் கிராமமக்கள் விரைந்து வந்து குட்டையில் குதித்து சரண்யாகுமாரியை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் செய்யாறு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சரண்யாகுமாரியின் பிணத்தை மீட்டனர். இதையடுத்து ஆரணி தாலுகா போலீசார் 2 மாணவிகளின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்