அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற பெண் சாவு பிணத்துடன் உறவினர்கள் போராட்டம்

பாப்பாரப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற பெண் உயிரிழந்தார். அவருடைய பிணத்துடன் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-08-05 23:00 GMT
பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பிக்கிலி ஊராட்சி புதுக்கரம்பு மலை கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சங்கீதா (35). இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மீண்டும் கருவுற்றிருந்த சங்கீதா கடந்த 1-ந் தேதி பாப்பாரப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் சங்கீதாவுக்கு ரத்தபோக்கு இருப்பதாக கூறி அவர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சங்கீதா கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து அவருடைய உடலை உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பாப்பாரப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். பின்னர் திடீரென அவர்கள் ஆம்புலன்சில் சங்கீதாவின் பிணத்தை வைத்துவிட்டு பிறந்த குழந்தையுடன் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு நேற்று முன்தினம் இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- சங்கீதாவுக்கு டாக்டர் இல்லாமல் ஊழியர்கள் சிகிச்சை அளித்ததால் தான் அவர் இறந்துள்ளார். மேலும் இரவில் சிகிச்சை அளிக்கும்போது மின்சாரம் இல்லை. இதனால் பேட்டரி லைட்டுகள் மூலம் சிகிச்சை அளித்துள்ளனர். இதன் காரணமாகவும் தவறு நடந்திருக்கலாம். மேலும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியிலும் டாக்டர்கள் உரிய சிகிச்சை அளிக்கவில்லை. எனவே, இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சங்கீதாவின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்த தர்மபுரி மருத்துவ பணிகள் துணை இயக்குனர் ஜெகதீசன், பென்னாகரம் தாசில்தார் சேதுலிங்கம், பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அன்புராஜ் மற்றும் பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த சங்கீதாவின் உறவினர்கள் விடிய, விடிய நடந்த போராட்டத்தை கைவிட்டு நேற்று காலையில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்