கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை மூடும் வரை போராட்டம் தொடரும் சீமான் பேட்டி

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை மூடும்வரை போராட்டம் தொடரும் என கும்பகோணத்தில் சீமான் கூறினார்.

Update: 2017-08-05 22:45 GMT

கும்பகோணம்,

நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பில் உழவை மீட்போம், உலகைக்காப்போம் என்ற கோரிக்கையுடன் உழவர் பாதுகாப்பு மாநாடு

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று காலை கும்பகோணத்தில் எஸ்.இ.டி.மகாலில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆனந்த், மாநில இளைஞர் பாசறை செயலாளர் மணிசெந்தில், வடக்கு மண்டல செயலாளர் வினோபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கை கும்பகோணம் மருத்துவர் சித்தார்த்தன் தொடங்கி வைத்தார். ஹூமாயூன் வரவேற்றார். கருத்தரஙகில் பலர் பேசினர். இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜக்மோகன்சிங், அஸ்சாமை சேர்ந்த ஜாதவ் பேயிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்காக கூட்டம் கூட்டமாக வந்து போராடி சாதித்தனர். அதற்கு காரணம் நமது முன்னோர்கள் விதைத்த விதைதான். போராட்டம் என்று வந்துவிட்டால் அச்சமின்றி போராட வேண்டும். கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை மூடமுடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை மூடும் வரை போராட்டம் தொடரும். ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை மூடவில்லை என்றால் தமிழகத்தில் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதுடன் விவசாயமும் பாதிக்கும். மதுக்கடைகளை மூட முடியாது என ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் மக்கள் அதற்காக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்தியில் காங்கிரஸ், பா.ஜ.க. என மாறி, மாறி ஆட்சிக்கு வருகிறது. கர்நாடகாவிலும் பா.ஜ.க.வும், காங்கிரசும் மாறி, மாறி ஆட்சிக்கு வருவதால் அரசியல் லாபத்திற்காக மத்திய அரசும் அங்குள்ள அரசியல் சூழலுக்கு ஏற்ப நடந்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு பாதிப்பு தான் ஏற்படுகிறது. தமிழகத்தில் ஏரி, குளங்கள் தூர்ந்துவிட்டதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், நீர் பங்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநிலங்களில் நீர் பங்கீட்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.இதே போல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய 4 மாநிலங்களிலும் நீர் பங்கீட்டு முறையை அமல்படுத்தினால் பிரச்சினையே இருக்காது.

விவசாயத்தையும், விவசாயிகளின் பிரச்சினையையும் மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்வதில்லை. கார் உற்பத்தி, செல்போன் வளர்ச்சி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால் அத்தியாவசிய தேவையான நீருக்கும், உணவுக்கும் முக்கியத்துவம் இல்லை. இயற்கை உரத்திற்கு ஜி.எஸ்.டி. வரி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 240 விவசாயிகள் உயிரிழந்தனர். பிரதமர் மோடி அதுபற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஒரு விவசாயி இறந்தது குறித்து மோடி துயரம் அடைந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்