கோவில்பட்டியில் போலீஸ் சிக்னல் கோபுரத்தில் ஏறி காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை மிரட்டல்

கோவில்பட்டியில், போலீஸ் சிக்னல் கோபுரத்தில் ஏறி காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

Update: 2017-08-05 21:00 GMT

கோவில்பட்டி,

கோவில்பட்டியில், போலீஸ் சிக்னல் கோபுரத்தில் ஏறி காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

தற்கொலை மிரட்டல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் சுமார் 200 அடி உயரத்தில் போலீஸ் சிக்னல் (போலீஸ் வயர்லெஸ் டவர்) கோபுரம் உள்ளது. இந்த கோபுரத்தில் நேற்று காலை 6.10 மணி அளவில் மாவட்ட காங்கிரஸ் வக்கீல் பிரிவு தலைவர் அய்யலுசாமி ஏறினார். அவர் சுமார் 120 அடி உயரத்தில் கோபுரத்தின் இடையில் நின்றவாறு, குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தியின் கார் மீது கல்வீசி தாக்கியவர்களையும், அவருக்கு கருப்பு கொடி காட்டியவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

தகவல் அறிந்து அங்கு கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று, அய்யலுசாமியை கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வருமாறு கூறினர். ஆனால் அவர் கோபுரத்தில் இருந்து கீழே இறங்க மறுத்ததுடன், தன்னை பிடிக்க யாரேனும் வந்தால் கீழே குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இதையடுத்து கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு, வலைகளுடன் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர்.

பேச்சுவார்த்தை

இதற்கிடையே வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன், மாவட்ட எஸ்.சி. எஸ்.டி. பிரிவு தலைவர் மாரிமுத்து, நகர தலைவர் சண்முகராஜா, வட்டார தலைவர் ரமேஷ்மூர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர் முத்து, முன்னாள் நகர தலைவர் செண்பகசுப்பு, மகேஷ்குமார், திருப்பதிராஜா, உள்ளிட்டவர்கள் அங்கு சென்று, அய்யலுசாமியிடம் செல்போன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அய்யலுசாமி கீழே இறங்க மறுத்ததால், மாநில நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் செல்போன் மூலம் அய்யலுசாமியிடம் பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், அகிம்சை முறையில்தான் போராட வேண்டும். உயிரை பணயம் வைத்து போராடக் கூடாது. உங்களது எதிர்ப்பை தெரிவித்து விட்டீர்கள். எனவே கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி விடுங்கள் என்று கூறினர்.

பரபரப்பு

இதனைத்தொடர்ந்து காலை 9.20 மணி அளவில் கோபுரத்தில் இருந்து அய்யலுசாமி கீழே இறங்கி வந்தார். அவருக்கு கயத்தாறு தாசில்தார் முருகானந்தம் பழச்சாறு வழங்கினார். முன்னதாக மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கோ‌ஷங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்