பெரோஸ் காந்தி : இரும்புப் பெண்ணின் இதய நாயகன்!

பெரோஸ் காந்தியின் வாழ்க்கையில் பெரிதும் அறியப்படாத பக்கங்களை இந்தத்தொடரில் தந்தி வாசகர்களுக்குத் தந்து வருகிறோம்.;

Update:2017-08-05 14:00 IST
பெரோஸ் காந்தியின் வாழ்க்கையில் பெரிதும் அறியப்படாத பக்கங்களை இந்தத்தொடரில் தந்தி வாசகர்களுக்குத் தந்து வருகிறோம். இந்திரா பெரோஸ் காதலை ஏற்றுக்கொள்ள மறுத்த நேரு திடீரென திருமணத்திற்கு ஒப்புக்கொண்டது ஏன்? காதலைப் பிரித்துவிடும் மகாத்மா காந்தியின் முயற்சி தோற்றது ஏன்? திருமணமானதும் பெரோசும், இந்திராவும் சிறைக்குப் போனது எதற்காக? இனி நீங்கள் படிக்கலாம்.

நேருவின் வேண்டுகோள் படி இந்திரா பெரோஸ் காதலை பிரித்துவிட மகாத்மா காந்தி முயற்சித்தார். இதற்காக இருவரையும் தனித்தனியாக கூப்பிட்டு பேசினார். அப்போது ஒரு நாள் பெரோசும் இந்திராவும் சேர்ந்து போய் காந்தியைப் பார்த்தார்கள்.

‘என்ன செய்தாலும் எங்களை நீங்கள் பிரிக்க முடியாது. எப்படி இருந்தாலும் நாங்கள் திருமணம் செய்து கொள்ள போகிறோம். நீங்களாக செய்து வைத்தால் நல்லது; இல்லாவிட்டால் நாங்களாகவே செய்து கொள்வோம்’ என பளரென்று சொல்லி விட்டார்கள்.

இந்த உறுதியைப் பார்த்த காந்தி, காதலர்களின் பக்கம் சாய்ந்தார். அவர்களுக்காக நேருவிடம் பேசினார்.

‘பெரோசை என் தத்துப்பிள்ளையாக நினைத்து இந்திராவைத் திருமணம் செய்து கொடு. உனக்கு மதம் தான் பிரச்சினை என்றால், அவரது பெயரில் உள்ள கான், ஜஹாங்கீர் போன்றவற்றை எடுத்துவிடலாம். இனி வெறுமனே பெரோஸ் காந்தி என்று அழைத்துவிட்டால் போகிறது’ என்று நேருவிடம் மகாத்மா சொன்னார்.

ஆண்டுக்கணக்கில் நீடித்த பஞ்சாயத்தை முடிக்க விரும்பிய நேருவும் வேறு வழியில்லாமல் பெரோஸ் இந்திரா திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். ‘வெளியில் சொல்ல முடியாத காரணத்திற்காகவே இந்திராவின் திருமணத்திற்கு நேரு ஒப்புக்கொண்டதாக’ அவரது செயலாளராக இருந்த மாத்தாய் பிற்காலத்தில் எழுதியிருக்கிறார்.

எப்படியோ பெரோசின் 9 ஆண்டுகால காதல் போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

1942, மார்ச்-26 அன்று அலகாபாத்தில் உள்ள நேருவின் பூர்வீக வீடான ஆனந்தபவனில் பெரோசுக்கும் இந்திராவுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. டெல்லி பல் கலைக்கழகத்தைச் சேர்ந்த சமஸ்கிருத பேராசிரியர் பண்டிட் லட்சுமி தார் சாஸ்திரி வேத மந்திரங்களை முழங்க இருவரும் மகிழ்ச்சியோடு மாலை மாற்றிக்கொண்டார்கள்.

திருமண புகைப்படத்தில் தலையில் தன் வழக்கமான தொப்பி இல்லாமல் பாதி முகம் மறைந்த நிலையில் சிரிப்பின்றி நேரு அமர்ந்திருப்பதை இப்போதும் பார்க்க முடியும். இந்திராவின் காதலை கடுமையாக எதிர்த்த அவரது அத்தை (நேருவின் சகோதரி) விஜயலட்சுமி பண்டிட் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு ஓரத்தில் உட்கார்ந்திருப்பதையும் அதே படத்தில் பார்க்கலாம். காங்கிரசின் முன்னணி தலைவர்கள் பலரும் இத்திருமணத்தில் பங்கேற்றனர்.

பெரோசும் இந்திராவும் புதுமணத் தம்பதிகளாக தனி வாழ்க்கையைத் தொடங்கினார்கள். மணமான 5 மாதங்களில் மும்பையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்கு இருவரும் சேர்ந்தே போனார்கள்.

அங்கே மகாத்மா காந்தி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை அறிவித்தார். இதையடுத்து 1942, ஆகஸ்டு 9 அதிகாலை முதல் காங்கிரஸ் தலைவர்களைத் தேடி தேடி கைது செய்யத் தொடங்கினார்கள்.

மாநாட்டில் இருந்து திரும்பிய பெரோசும் இந்திராவும் காவல்துறையின் கையில் சிக்காமல் சில நாட்கள் தலைமறைவாக இருந்தனர். ஆனாலும் செப்டம்பர் 10-ந் தேதி இருவரும் கைது செய்யப்பட்டனர். தம்பதி சமேதராக அலகாபாத் நைனி சிறையில் அடைக்கப்பட்டனர். ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.200 அபராதமும் விதிக்கப்பட்டது. முறையீட்டில் தண்டனை குறைந்து சில மாதங்கள் சிறை வாசத்திற்குப் பிறகு விடுதலை ஆனார்கள்.

விடுதலைப் போராட்டம், அரசியல் எல்லாம் தாண்டி காதல் மணம் புரியும் எல்லாத் தம்பதிகளைப் போலவே நாட்கள் நகர, நகர பிரச்சினைகள் உருவெடுக்க ஆரம்பித்தன.

‘வெள்ளைக்காரனுக்கு பணத்தைக் கொடுத்து சுதந்திரம் வாங்கி விடலாமா?’ என்று கேட்குமளவுக்கு செல்வ செழிப்பு நிறைந்த, நாட்டின் பணக்கார குடும்பத்தின் செல்வ மகளாக பிறந்து, வளர்ந்த இந்திராவால் நடுத்தரத்திற்கும் கீழான சூழலில் இருந்த பெரோஸ் உடனான வாழ்வது அத்தனை எளிதான தாக இல்லை.

அவர் எழுதி சம்பாதித்த குறைந்த தொகையில் குடும்பம் நடத்த வேண்டியிருந்தது. உடல் நல பாதிப்பு, பணத்தேவை ஆகியவற்றுக்காக பிறந்த வீட்டின் உதவியை நாட வேண்டியிருந்தது.

இந்திரா முதல் முறை கர்ப்பம் தரித்த போது, குழந்தை பெற்றெடுக்கும் அளவுக்கு அவரது உடல்நிலை இல்லை என்று மருத்துவர்கள் எச்சரித்தனர். அதைப்போலவே அந்தக் கரு கலைந்து போனது. வெளிநாட்டு மருத்துவர்களும் இதையே சொன்னார்கள். அதன் பிறகும் அடுத்தடுத்து அவர் இரண்டு முறை கர்ப்பம் தரித்தார். ஆனால் ஒவ்வொரு முறையும் கரு நிலைக்கவில்லை. உருவான வேகத்திலேயே கலைந்தது.

காதல் கணவன் மீதான அன்போ, குழந்தையின் மீதான ஆசையோ ஏதோ ஒன்று மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி இந்திராவை செயல்பட வைத்தது. பெரோஸ்-இந்திரா தம்பதிக்கு 1944, ஆகஸ்டு 20-ந் தேதி முதல் ஆண் குழந்தை பிறந்தது.

அடுத்த சில நாட்களில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. குழந்தைக்கு பெயர் வைப்பதில் கூட கணவரின் கருத்தை இந்திரா கேட்கவில்லை. தன் அம்மா கமலாவின் நினைவாக ‘ராஜீவ் ரத்னா’ என்ற பெயர் வைப்பதில் இந்திரா உறுதியாக இருந்தார்.

அப்போது சிறையில் இருந்த நேரு இந்திராவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், “நீ விரும்பியதைப் போல ‘ராஜீவ் ரத்னா’ என்பது முதல் பெயராக இருக்கட்டும். இரண்டாவது பெயராக ‘பிர்ஜிஸ்’ என்று வைத்துக்கொள். இதில் எங்காவது நேரு என்ற பெயரைச் சேர்க்க முடியுமா? எனக்குத் தெரியும். மூன்றாவது பெயராக பெரோசின் குடும்பப் பெயரான ‘காந்தி’ என்றுதான் வைக்க முடியும். காந்தி-நேரு என்று வைத்தால் அபத்தமாக இருக்கும். என்ன செய்வது? என் ஆசைக்கு அளவேது” என்று நேரு குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் நேரு எதை அபத்தம் என்று சொன்னாரோ, அதையே இந்திரா செய்தார். தன் மூத்த மகனுக்கு ‘ராஜீவ் ரத்னா பிர்ஜிஸ் நேரு காந்தி’ என்று பெயர் சூட்டினார். (காலப்போக்கில் ராஜீவ் காந்தி என்பதே நிலைத்தது)

கணவன்-மனைவிக்கு இடையில் ஏற்பட்ட மோதல் மெல்ல விரிசலாக உருவெடுத்து பிரிந்து வாழத்தொடங்கினர். தந்தையின் வீட்டிலேயே இந்திரா தங்கிவிட்டார். செல்ல மகள் படும் வேதனை நேருவையும் இணங்கிப் போக வைத்தது. மருமகனோடு சமரசமாகப் போக முடிவெடுத்தார்.

1938-ல் நேரு ஆரம்பித்து ஆங்கிலேய அரசின் நெருக்கடியால் 4 ஆண்டுகளில் மூடப்பட்ட ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை மீண்டும் கொண்டு வரப்பட்டது. அதற்கு மேலாண் இயக்குநராக 1945-ல் பெரோஸ் நியமிக்கப்பட்டார். அதாவது முதலாளியாக்கப்பட்டார்.

தன் புத்திக்கூர்மையாலும் இயல்பாகவே இதழியல் துறை மீதிருந்த ஈடுபாட்டாலும் அந்தப் பத்திரிகையை நஷ்டத்தில் இருந்து மீட்டெடுத்தார். இது போக மகாத்மா காந்தியின் ‘நவஜீவன்’ பத்திரிகையையும் கொஞ்ச காலம் பெரோஸ் கவனித்துக் கொண்டார்.

அப்போது 1946-ல் இந்திராவுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது.

1947-ல் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தவுடன் முதல் பிரதமராக நேரு பதவி ஏற்றார். அரசியல் சாசன நிர்ணய சபையில் 1950-ம் ஆண்டு பெரோஸ் காந்தி உறுப்பினரானார். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முதல் தலைமை நிர்வாகியாகவும் பொறுப்பேற்றார்.

1952-ல் நடந்த நாட்டின் முதல் பொதுத்தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் இருந்து பெரோஸ் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டு வென்றார். கணவரின் வெற்றிக்காக இந்திரா காந்தி ரேபரேலியில் தீவிர பிரசாரம் செய்தார். சின்னச்சின்ன சண்டை, பிரிவு, பிறகு சேர்தல் என மண வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான ‘தீன் மூர்த்தி பவனில்’ இந்திராவுடன் பெரோஸ் சேர்ந்து வசிக்கத் தொடங்கினார். தந்தையின் அலுவல்களிலும், அரசியல் நடவடிக்கைகளிலும் இந்திராவும் மெல்ல பங்கெடுக்க ஆரம்பித்த காலம் அது.

கணவன்-மனைவிக்கு இடையில் மீண்டும் பிரச்சினை வெடித்தது ஏன்?

பெரோஸ் திடீரென இறந்தது எப்படி?

நேருவும் இந்திராவும் அப்போது சொன்ன வார்த்தைகள் என்ன?

(ரகசியங்கள் தொடரும்)


இந்திராவின் செல்லப்பெயர்!

இந்திராவை ‘இண்டு’ என்று பெரோஸ் காந்தி செல்லமாக அழைப்பார். அரசியல், தனிப்பட்ட ‘ஈகோ’ என எத்தனையோ அம்சங்கள் அவர் களின் தனிப்பட்ட வாழ்வை சிதைத்த போதும் ‘இண்டு’ என்று அழைப்பதில் இருந்து அவர் மாறுபட்டதில்லை. எழுத்து, அரசியல் என இயங்குவதால், ‘24 மணி நேரம் போதவில்லை’ என்று அடிக்கடி சொல்லும் பெரோஸ் நேரம் கிடைக்கும் போது மகன் களுக்கு அருமையாக சமைத்து கொடுப்பார். அவர்களோடு நேரம் செலவிடுவார்.

நீதிமன்றத்தில் திருமணப் படம்!

இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி இறந்த பின்னும் அவரது மனைவி மேனகா மாமியாருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். சஞ்சய் பெயரில் இருந்த பங்குகள் உள்ளிட்ட சொத்துகளுக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது இந்திராகாந்தி ‘இந்து’ மதத்தைச் சேர்ந்தவர் அல்லர் என்று மேனகா தரப்பு வாதிட்டது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்து முறைப்படி நடந்த இந்திரா-பெரோஸ் திருமண புகைப்படம் நீதிமன்றத்தில் ஆதாரமாக காட்டப்பட்டது.

மேலும் செய்திகள்