அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி

வருமான வரித்துறையால் சொத்து முடக்கப்பட்டதால் அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.

Update: 2017-08-04 23:35 GMT
ஈரோடு,

அறச்சலூர் அருகே ஓடாநிலையில் தீரன் சின்னமலை நினைவு தினம் நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. அங்குள்ள மணிமண்டபத்தில் தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

கொங்குநாட்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட முதல் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை. அவருடைய நினைவுதினத்தில் அவர் பெற்றுத்தந்த சுதந்திரத்தை பாதுகாப்போம் என்று உறுதி எடுத்துக்கொள்வோம்.

தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. ஆனால் வடமாநிலங்களில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஒரே தேசம் என்ற அடிப்படையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் இதற்காக நாட்டில் உள்ள நதிகளை இணைக்க மத்திய அரசு முன்வர வேண்டும். இதன்மூலம் குடிநீர் பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு கிடைக்கும். மேலும், மழை வெள்ளத்தால் ஏற்படும் உயிரிழப்பும், வறட்சியால் ஏற்படும் தற்கொலையும் தடுக்கப்படும்.

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை பற்றி கவலைப்படாமல் கட்சி பிரச்சினையை மட்டுமே ஆளும் கட்சியினர் சிந்தித்து வருகிறார்கள். வறட்சியால் கிராமங்கள் தடுமாற்றம் அடைந்து உள்ளது. எனவே நீர் மேலாண்மை வாரியத்தை தமிழக அரசு தொடங்கி, தனி அமைச்சரையும் நியமிக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல் சுனாமிபோல் பரவி வருகிறது. இதையெல்லாம் கவலைப்படாத சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது பிரச்சினைக்காக டெல்லிக்கு சென்று வருகிறார்.

வருமான வரித்துறையால் சொத்துகள் முடக்கப்பட்டதால் அமைச்சர் விஜயபாஸ்கர் பதவியில் இருந்து விலக வேண்டும். ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறார். எனவே விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.

மேலும் செய்திகள்