230 அரங்குகளுடன் ஈரோடு புத்தக திருவிழா தொடங்கியது அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் 230 அரங்குகளுடன் ஈரோடு புத்தக திருவிழா நேற்று தொடங்கியது. விழாவில் அமைச்சர்கள் கலந்துகொண்டு திறந்து வைத்தனர்.

Update: 2017-08-04 23:20 GMT
ஈரோடு,

மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஆண்டு தோறும் ஈரோட்டில் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 13-வது ஆண்டாக ஈரோடு புத்தக திருவிழா நேற்று மாலை தொடங்கியது. இதன் தொடக்க விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். மக்கள் சிந்தனை பேரவையின் மாநில தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் புத்தக திருவிழா அறிமுக உரையாற்றி வரவேற்று பேசினார்.

விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு புத்தக அரங்கினை திறந்து வைத்தார். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் விழாவில் கலந்து கொண்டு உலகத்தமிழர் படைப்பரங்கத்தை திறந்து வைத்தார்.

தேசிய நல விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் எஸ்கேஎம்.மயிலானந்தன் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.சண்முகன் பெற்றுக்கொண்டார். விழாவில் தென் இந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர் காந்தி கண்ணதாசன், அந்தியூர் இ.எம்.ஆர்.ராஜா என்கிற கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னாள் சிட்கோ வாரிய தலைவர் சிந்து ரவிச்சந்திரன், மக்கள் சிந்தனை பேரவையின் நிர்வாகிகள் ராஜன், காசியண்ணன், பழனிச்சாமி, ராமசாமி, செல்வகுமார், க.நா.பாலன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு புத்தகத்திருவிழாவில் 230 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் புத்தக பதிப்பாளர்கள் நேரடியாக வந்து புத்தகங்களை குவித்து உள்ளனர். தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழி புத்தகங்களும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. அறிவியல், கலை, இலக்கியம், கவிதை, மத சம்பந்தப்பட்ட புத்தகங்கள், தத்துவம், மத மறுப்பு நூல்கள் என்று அனைத்தும் இங்கே உள்ளன. குழந்தைகளுக்காக காமிக்ஸ் கதைகள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான புத்தகங்கள், போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் உள்ளன. தமிழகத்தில் இருந்து முக்கியமான முன்னணி பதிப்பகங்கள் கடை அமைத்து உள்ளன. மிகப்பெரிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் முதல் அறிமுக எழுத்தாளர்களின் புத்தகங்கள், வரலாற்று புத்தகங்கள், நவீன இலக்கியங்கள் என்று அனைத்தும் உள்ளன.
புத்தகம் வாங்க வரும் பொதுமக்களின் வசதிக்காக நடமாடும் ஏ.டி.எம். எந்திரம் மைதானத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. மாணவ-மாணவிகள் ரூ.250-க்கும் மேல் புத்தகங்கள் வாங்கினால் அவர்களுக்கு புத்தக ஆர்வலர்கள் என்ற சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இன்று (சனிக்கிழமை) பகல் 11 மணிக்கு புத்தக அரங்குகள் திறக்கப்படும். இரவு 9 மணி வரை புத்தகங்கள் விற்பனை நடைபெறும். இங்கு வாங்கும் புத்தகங்களுக்கு தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சியில் உறவுகளும் உணர்வுகளும் என்ற தலைப்பில் ஐ.பி.எஸ். அதிகாரி அ.கலியமூர்த்தி, அன்புக்கனல் என்ற தலைப்பில் பேராசிரியர் பாரதி புத்திரன் ஆகியோர் பேசுகிறார்கள்.

ஈரோடு புத்தகத்திருவிழாவில் ‘தினத்தந்தி’ பதிப்பகத்தின் சார்பில் புத்தக அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. 99-ம் எண் அரங்கில் ‘தினத்தந்தி’ பதிப்பகம் வெளியிட்டு உள்ள அனைத்து புத்தகங்களும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும்.
பொதுமக்களின் வரவேற்பை மிகவும் பெற்ற வரலாற்று சுவடுகள், ஆயிரம் ஆண்டு அதிசயம், ஆதிச்சநல்லூர்-கீழடி மண் மூடிய மகத்தான நாகரிகம், கலாம் ஒரு சரித்திரம், சிறகை விரிக்கும் மங்கள்யான், ஆளுமைத்திறன் புத்தகங்களுடன், தமிழ்சினிமா வரலாறு (பாகம்-1), சிவந்தி ஆதித்தனார் சாதனை சரித்திரம், ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு, புதையல் ரகசியம், மகிழ்ச்சியான வாழ்வுக்கு மகத்தான மந்திரங்கள், பரபரப்பான வழக்குகள், நம்ப முடியாத உண்மைகள், 27 நட்சத்திர தலங்கள், சினிமாவின் மறுபக்கம், மகாசக்தி மனிதர்கள், வாழ்வை வளமாக்கும் பூஜை-விரத முறைகள், தூரமில்லை தொட்டு விடலாம், அதிசயங்களின் ரகசியங்கள், இதயம் தொட்ட பழமொழிகள், பழங்கால இந்தியர்களின் விஞ்ஞானம், இலக்கியத்தில் இன்பரசம், பழகிப்பார்ப்போம் வாருங்கள், உடலும் உணவும், நலம்தரும் மூலிகை சமையல், நோய்தீர்க்கும் சிவாலயங்கள், அதிகாலை இருட்டு, மருத்துவ பூங்கா, ஆலய வழிபாடு ஏன்-எதற்கு-எப்படி?, பைபிள் மாந்தர்கள், ஆயுளை அதிகரிக்கும் ஆரோக்கிய உணவு முறைகள் உள்பட பல்வேறு புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வாங்கிச்செல்கிறார்கள்.

மேலும் செய்திகள்