வியாபாரியிடம் ரூ.24 லட்சம் வைரங்களை பறித்த 2 போலீசார் சிக்கினர்

வியாபாரியிடம் ரூ.24 லட்சம் மதிப்புள்ள வைரங்களை பறித்த போலீஸ்காரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-08-04 22:39 GMT
மும்பை,

வியாபாரியிடம் ரூ.24 லட்சம் மதிப்புள்ள வைரங்களை பறித்த போலீஸ்காரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வைர வியாபாரி

மும்பை போரிவிலியை சேர்ந்த வைர வியாபாரியின் அலுவலகத்திற்கு கடந்த புதன்கிழமை அன்று மும்பை ஆயுதப்படை போலீசில் பணிபுரிந்து வரும் சந்திரகாந்த் கவரே, சந்தோஷ் கவாஸ் ஆகிய 2 பேர் வந்தனர். அவர்கள் கடந்த வாரம் நடந்த வைர விற்பனை விவரத்தை தெரிவிக்கும்படி அவரிடம் கூறினார்கள்.

பின்னர் திடீரென அங்கிருந்த ரூ.24 லட்சம் மதிப்புள்ள வைரங்களை எடுத்துக்கொண்டனர். மேலும் விசாரணைக்கு போலீஸ் தலைமை அலுவலகத்திற்கு வரும்படி கூறி, அவரை காரில் ஏற்றி அழைத்துச்சென்றனர்.

2 போலீசார் கைது


கார் சிறிது தூரம் சென்றதும் அவர்கள் வேறு ஒரு வழக்கு தொடர்பாக ஒருவரை கைது செய்ய செல்லவேண்டி உள்ளது. எனவே மாலையில் போலீஸ் தலைமை அலுவலகத்திற்கு வரும்படி கூறிவிட்டு வைர வியாபாரியை கீழே இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.

இந்தநிலையில், போலீசார் இருவரும் தன்னிடம் இருந்த வைரங்களை பறித்து சென்றதை உணர்ந்த வியாபாரி இதுபற்றி போரிவிலி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வைரங்களை பறித்துச்சென்ற ஆயுதப்படை போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்