ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு விழுப்புரம் பகுதி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2017-08-04 22:28 GMT
மேல்மலையனூர்,

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டது. இதையடுத்து உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் ரமேஷ் பூசாரி, அறங்காவலர்கள் ஏழுமலை, கணேசன், செல்வம், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

விழுப்புரம்

விழுப்புரம் நரசிங்கபுரம் நெடுந்தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத 3-ம் வெள்ளிக்கிழமையான நேற்று காலை முதல் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காலை 9 மணியளவில் கரகம் ஜோடித்து வீதியுலாவும், இரவு 9 மணிக்கு சாமி வீதியுலாவும் நடைபெற்றது. இதில் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் விழுப்புரம் பூந்தோட்டம் முத்துமாரியம்மன், அங்காளம்மன், நேருஜி சாலை வீரவாழி மாரியம்மன், மந்தக்கரை அம்மச்சாரம்மன் உள்பட பல்வேறு கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்