ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய மந்திரி பிரகாஷ் மேத்தாவை பதவி நீக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அமளி

ஊழல் புகாரில் சிக்கிய மந்திரி பிரகாஷ் மேத்தாவை பதவி நீக்கக்கோரி எதிர்கட்சிகள் சட்டபையில் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.

Update: 2017-08-04 22:24 GMT

மும்பை,

ஊழல் புகாரில் சிக்கிய மந்திரி பிரகாஷ் மேத்தாவை பதவி நீக்கக்கோரி எதிர்கட்சிகள் சட்டபையில் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபை நேற்று 8 முறை ஒத்திவைக்கப்பட்டது.

ஊழல் புகார்

மராட்டிய வீட்டுவசதி துறை மந்திரி பிரகாஷ் மேத்தா, ஒரு விட்டு வசதி திட்டத்திற்கான மேம்பாட்டு உரிமைகளை முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசின் ஆலோசனை இன்றி பரிமாற்றம் செய்ததாகவும், இதில் ஊழல் நடந்திருப்பதாகவும் புகார் எழுந்தது.

எனவே அவரை முதல்–மந்திரி பதவி நீக்கம் செய்யவேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் நேற்று இந்த பிரச்சினை சட்டசபையில் பூதாகரமாக வெடித்தது. நேற்று சட்டசபை கூடியதும் இந்த பிரச்சினை கையில் எடுத்த தனஞ்செய் முண்டே, ஊழல் புகாரில் சிக்கியிருக்கும் பிரகாஷ் மேத்தாவின் பதவி உடனடியாக பறிக்கப்படவேண்டும் என்றும், மேலும் புகார் தொடர்பாக அரசு பதில் அளிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பதவி விளக தயார்

இதற்கு பதில் அளித்து பேசிய மந்திரி சந்திரகாந்த் பாட்டீல், முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இதுகுறித்து ஏற்கனவே சட்டசபையில் விளக்கம் அளித்துள்ளதாகவும், விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்துள்ளதாகவும் கூறினார்.

ஆனால் இவரின் பதிலால் அதிருப்தி அடையாத எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சிக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை 8 முறை ஒத்திவைக்கப்பட்டது. அதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. மதியம் கேள்வி நேரத்தின்போதும் எதிர்கட்சிகளின் அமளி நீடித்ததால் மதியத்திற்கு பிறகு சட்டசபை முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த பிரச்சினை குறித்து பதில் அளித்த வீட்டுவசதி துறை மந்திரி பிரகாஷ் மேத்தா முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினால் தான் பதவி விளக தாயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்