மேல்மலையனூர் அருகே பூண்டியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
மேல்மலையனூர் அருகே பூண்டியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் அருகே சிறுதலைப்பூண்டி கிராமத்தில் பழமைவாய்ந்த பூண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் அம்மனுக்கு பால், பன்னீர், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி திரளான பக்தர்கள் அலகு குத்தியும், செடல் காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தீமிதி திருவிழா
பின்னர் மாலை 5 மணிக்கு உற்சவ அம்மன் கோவில் அருகில் உள்ள தெப்பகுளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஊர்வலமாக தீக்குண்டம் முன்பு எழுந்தருளினார். இதையடுத்து மாலை 5.45 மணியளவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களுடைய நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இதில் மேல்மலையனூர் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.