தமிழக ஏரி-ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் ஏரி-ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-08-04 22:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் 2016-17-ம் ஆண்டில் 1,638 இலவச விவசாய மின் இணைப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 235 இலவச விவசாய மின்இணைப்பு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 1,403 விவசாய மின் இணைப்பு வழங்கப்படாமல் கிடப்பில் உள்ளது.

இதேபோல் அரியலூர் மாவட்டத்திலும் பல்வேறு விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு வழங்கப்படாமல் இருக்கிறது. எனவே விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பினை விரைந்து வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பரமசிவம், ராமலிங்கம், ராசேந்திரன், ரத்தினவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்