தஞ்சையில் நாணய கண்காட்சி தொடங்கியது

தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சோழ மண்டல நாணயவியல் கழகம் சார்பில் நாணய கண்காட்சி தொடக்கவிழா நேற்று நடந்தது.

Update: 2017-08-04 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் உருவத்துடன் கூடிய வெள்ளியால் ஆன ரூ.5 மற்றும் ரூ.1000 நாணயங்களும் இடம் பெற்றிருந்தன. தாய்லாந்தை சேர்ந்த தற்போதும் புழக்கத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய ரூபாய் நோட்டும் இடம் பெற்றுள்ளன. ரஷியாவில் வெளியிடப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய பணத்தாள், கிழக்கு ஜெர்மனியில் பட்டுத்துனியில் அச்சிடப்பட்ட பணம், சோமாலியாவில் மேஷம், ரிஷபம் உள்ளிட்ட 12 ராசிகளுக்கும் தனித்தனியாக வெளியிடப்பட்ட நாணயங்கள், சீனாவின் மூங்கில் நாணயம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

பண மதிப்பை குறைக்க ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்துவிட்டு அதற்கு பதிலாக புதிதாக ரூ.2 ஆயிரம், ரூ.500 நோட்டுகள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன. ஆனால் மால்ட்டா நாட்டில் பண மதிப்பை குறைக்க 2 ரூபாய் நோட்டில் 2 என்ற எண்ணை அழித்துவிட்டு அதற்கு பதிலாக 1 என்று எழுதப்பட்டு முத்திரை குத்தப்பட்டுள்ளது. இந்த நோட்டும் இடம் பெற்றிருந்தது. திரிபாடி, சோமா ஆகிய 2 தீவுகளும் இணைந்து ஒரு நாணயத்தை வெளியிட்டுள்ளது. அந்த நாணயத்தை இரண்டாக பிரிக்க முடியும். அப்படி பிரித்தால் இரு தீவுகளை போல் அவைகள் காட்சி அளிக்கும். இந்த நாண யமும் உள்ளது.

எலிசபெத் ராணியின் 90-வது பிறந்தநாளையொட்டி 90 என்ற எண்ணில் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இவையும் இடம் பெற்றுள்ளது. இந்த கண்காட்சியை மாணவ, மாணவிகள் பலர் வந்து பார்த்து சென்றனர். இந்த கண்காட்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சோழ மண்டல நாணயவியல் கழக நிறுவனர் துரைராசு, தலைவர் சக்திவேல், செயலாளர் குழந்தைசாமி, நிர்வாகி ஸ்டீபன் ஆகியோர் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்