உணவு பாதுகாப்பு துறை சார்பில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
உணவு பாதுகாப்பு துறை சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
சென்னை,
உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அமுதா உணவு கலப்படம் குறித்த விழிப்புணர்வு நடத்துவதோடு சேர்த்து டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வையும் நடத்த உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, உணவு பாதுகாப்பு துறை சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் (சென்னை மாவட்டம்) சதாசிவம், மணிமாறன், கண்ணன் ஆகியோர் நேற்று காலை அரும்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் உருவாக்கும் கொசுப்புழுக்கள் எப்படி உருவாகின்றன? அதை தடுக்க என்ன வழிகள் இருக்கின்றன? என்பது குறித்த காட்சி படங்களை ஒளிபரப்பி விழிப்புணர்வு நடத்தினார்கள்.
அதனைத்தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியான சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது மாணவர்கள் ‘டெங்குக்கு அபாயம், நிலவேம்பு கசாயம்’, தண்ணீர் தொட்டிகளை மூடி வைப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வந்தனர்.
அதேபோல், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுப்புழுக்களை பாட்டிலில் அடைத்து வைத்து அதை பொதுமக்களுக்கு காண்பித்து விளக்கி கூறினார்கள்.
இதேபோல் அம்பத்தூர் திருவேங்கடநகர் பூங்காவில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மண்டல அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.