மணலியில் காலி இடத்தில் நிறுத்தி இருந்த தனியார் நிறுவன பஸ்சை திருடிச்சென்ற வாலிபர் கைது

மணலியில் காலி இடத்தில் நிறுத்தி இருந்த தனியார் நிறுவன பஸ்சை திருடிச்சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-08-04 22:30 GMT
திருவொற்றியூர்,

மணலி சச்சிதானந்தா தெருவைச் சேர்ந்தவர் விமல்கண்ணன் (வயது 28). இவர், கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஊழியர் களை ஏற்றிச்செல்லும் பஸ் டிரைவராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து மணலியில் தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள காலி இடத்தில் பஸ்சை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

நேற்று காலை வந்து பார்த்த போது பஸ் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி மணலி போலீசில் புகார் செய்தார். பஸ்சில் பொருத்தப்பட்டு உள்ள ஜி.பி.எஸ். கருவி உதவியுடன் அந்த பஸ், மாதவரம் பால்பண்ணையை அடுத்த மஞ்சம்பாக்கம் அருகே வந்து கொண்டு இருப்பது தெரிந்தது.

வாலிபர் கைது

இதுபற்றி உடனடியாக மாதவரம் பால்பண்ணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து சென்று பஸ்சை மடக்கிப் பிடித்தனர். பஸ்சை ஓட்டி வந்த சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கோபியை (30) பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர், அந்த பஸ்சில் இருந்து டீசலை திருடுவதற்காக பஸ்சை அம்பத்தூர் ஓட்டிச்சென்றதாகவும், டீசலை திருடி விட்டு மீண்டும் அதே இடத்தில் பஸ்சை நிறுத்துவதற்காக ஓட்டி வந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் அவர், போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பேசி வருகிறார்.

இதையடுத்து பஸ்சை திருடிச்சென்றதாக கோபியை கைது செய்த மணலி போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்