தையல் தொழிலாளி கொலை வழக்கில் சரக்கு ஆட்டோ உரிமையாளர் உள்பட 3 பேர் கைது

வீரபாண்டி அருகே இரும்பு கம்பியால் தாக்கி தையல் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் சரக்கு ஆட்டோ உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மற்றொருவரை போலீசார் தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2017-08-04 22:45 GMT
வீரபாண்டி,

திருப்பூர் வீரபாண்டியை அடுத்த சுண்டமேடு குப்பாண்டம்பாளையம் பகுதியில் குப்பை மேடு உள்ளது. அந்த குப்பை மேட்டில் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு ஒருவர் பழைய பொருட்கள் ஏதாவது கிடைக்குமா? என்று தேடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு சரக்கு ஆட்டோ வந்து நின்றது. அந்த ஆட்டோவில் இருந்து இறங்கிய சிலர், ஆட்டோவில் ரத்த காயங்களுடன் கிடந்த ஒருவரை இழுத்து வெளியே போட்டு விட்டு, அதே சரக்கு ஆட்டோவில் வேகமாக தப்பி சென்றனர்.

இதை பார்த்து அங்கு பழைய பொருட்களை தேடிக்கொண்டிருந்தவர் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை கைகாட்டி நிறுத்தி, நடந்த விபரத்தை பழைய பொருட்களை தேடிக்கொண்டிருந்தவர் கூறினார். உடனே மோட்டார் சைக்கிளில் வந்தவர், அந்த சரக்கு ஆட்டோவை விரட்டி சென்று அதன் பதிவு எண் குறித்து வைத்துக்கொண்டு வீரபாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு காயங்களுடன் கிடந்தவருக்கு உயிர் இருந்தது. உடனே அவரை ஒரு ஆம்புலன்சில் ஏற்றி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு போகும் வழியிலேயே அவர் இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இதற்கிடையில் அந்த சரக்கு ஆட்டோவின் பதிவு எண் மூலம் போலீசார் விசாரித்தபோது அந்த சரக்கு ஆட்டோ திருப்பூர் ராயபுரத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது.

இதையடுத்து வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம் மற்றும் போலீசார் அங்கு சென்று அந்த சரக்கு ஆட்டோவின் உரிமையாளர் செல்வம், சரக்கு ஆட்டோ டிரைவர் சதீஷ் (20) மற்றும் முருகன் (35) ஆகியோரை வீரபாண்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அந்த சரக்கு ஆட்டோவும் போலீஸ் நிலையம் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் மணிகண்டன் (வயது 21) தையல் தொழிலாளி, திருப்பூர் கணபதிபாளையத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. மேலும் மணிகண்டனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சரக்கு ஆட்டோ உரிமையாளர் செல்வம், சரக்கு ஆட்டோ டிரைவர் சதீஷ் மற்றும் முருகன் ஆகியோரை வீரபாண்டி போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட செல்வம் போலீசில் கொடுத்துள்ள வாக்கு மூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
கோவை கணபதிபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் அந்த பகுதியில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர், தனது மோட்டார்சைக்கிளை ராயபுரத்தை சேர்ந்த செல்வத்திடம் ரூ.12 ஆயிரத்திற்கு அடகு வைத்துள்ளார். ஆனால் அந்த பணத்தை திரும்ப கொடுக்காமல் வேறு சாவியை போட்டு செல்வத்திடம் இருந்து மோட்டார் சைக்கிளை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு செல்வத்திற்கும், மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டனும், இவருடைய தம்பி ஆனந்த் (21) ஆகியோர் சேர்ந்து செல்வத்தின் சரக்கு ஆட்டோ கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து செல்வம் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்தார்.

இந்த புகாரை தொடர்ந்து செல்வத்திற்கும், மணிகண்டனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம், தனது தம்பி ஜோசப், சரக்கு ஆட்டோ டிரைவர் சதீஷ் மற்றும் முருகன் ஆகியோருடன் கணபதிபாளையம் பகுதிக்கு சென்றனர். அங்கு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த மணிகண்டனையும், அவருடைய தம்பி ஆனந்த்தையும் தாக்கி ஆட்டோவில் கடத்தி சென்றுள்ளனர். இதில் ஆனந்த் ஆட்டோவில் இருந்து குதித்து தப்பி சென்று விட்டார். இதனால் தனியாக சிக்கிய மணிகண்டனை இரும்பு கம்பியால் தாக்கி குப்பாண்டம்பாளையம் குப்பை மேட்டில் இழுத்துப்போட்டு சென்று இருப்பது தெரியவந்தது.

இவ்வாறு போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதான 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தலை மறைவாக உள்ள செல்வத்தின் தம்பி ஜோசப்பை போலீசார் தேடி வருகிறார்கள். காயம் அடைந்த ஆனந்த் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் செய்திகள்