திருவான்மியூரில் நடந்த மூதாட்டி கொலை வழக்கில் 3 பேர் கைது
திருவான்மியூரில், மூதாட்டி கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை திருவான்மியூர் 16-வது கிழக்கு தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலைகள் செய்து வந்தவர் மல்லிகா (வயது 60). இவரது சொந்த ஊர் காஞ்சீபுரம். கடந்த மாதம் 12-ந் தேதி காலை அந்த குடியிருப்பின் மாடி படிக்கட்டு அருகே கார்கள் நிறுத்தும் பகுதியில் மூதாட்டி மல்லிகா, தலையில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் மாடியில் இருந்து தவறி விழுந்து இருக்கலாம் என்ற கோணத்தில் திருவான்மியூர் போலீசார் விசாரித்து வந்தனர்.
ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் மூதாட்டியின் தலையில் உருட்டுக்கட்டையால் தாக்கியதால்தான் அவர் இறந்து இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.
3 பேர் கைது
இது தொடர்பாக திருவான்மியூர் இந்திரா தெருவைச் சேர்ந்த தியாகராஜன்(23), அவருடைய நண்பரான திருவான்மியூர் மங்களேரி பகுதியை சேர்ந்த டெல்லி என்ற விஜயகுமார்(23) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் தங்களது நண்பர் அஜிசுடன் சேர்ந்து மூக்குத்திக்காக மூதாட்டியை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து தியாகராஜன், விஜயகுமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே வேறு ஒரு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள அஜிசையும், இந்த வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து அவர்கள் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
அடித்துக்கொன்றோம்...
கடந்த மாதம் 11-ந் தேதி இரவு மழை பெய்து கொண்டு இருந்ததால் நாங்கள் 3 பேரும் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கார் நிறுத்தும் பகுதியில் மழைக்காக ஒதுங்கி நின்றோம்.
அப்போது அங்கு தூங்கிக்கொண்டு இருந்த மூதாட்டி மல்லிகா அணிந்து இருந்த மூக்குத்தியை திருட முயன்றோம். இதனால் திடுக்கிட்டு எழுந்த மூதாட்டி, கூச்சலிட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் அங்கிருந்த உருட்டுக்கட்டையால் மல்லிகாவின் தலையில் தாக்கி கொலை செய்து விட்டு, அவர் அணிந்து இருந்த மூக்குத்தியை கழற்றி எடுத்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டோம்.
இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.
கைதானவர்களிடம் இருந்து மூக்குத்தி மற்றும் கொலைக்கு பயன்படுத்திய உருட்டுக்கட்டையை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.