திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் விழாவில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு

திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அந்த கல்லூரியில் நடந்த விழாவில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.;

Update: 2017-08-04 22:30 GMT
திருப்பூர்,

திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில், கல்லூரி பேரவை தொடக்க விழா நேற்று கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்தவர்களை கல்லூரியின் முதல்வர் நேச்சல் நான்சி பிலிப் வரவேற்றார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்(வீட்டுவசதி) வெள்ளியங்கிரி தலைமை தாங்கி பேசினார். கோவை மண்டல துணை பதிவாளர்(வீட்டு வசதி) கோவிந்தராஜன், கூட்டுறவு சார்பதிவாளர் பாஸ்கரபூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கல்லூரி பேரவையை தொடங்கி வைத்து பேசியதாவது:-
கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் மூலமாக நடத்தப்படும் ஒரே மகளிர் கல்லூரி என்ற பெருமையை இந்த கல்லூரி பெற்றுள்ளது. இந்த கல்லூரியின் மீது மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனிக்கவனம் செலுத்தினார். இந்த கல்லூரிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க தயாராக உள்ளேன். கல்லூரி மாணவிகளுக்கு 20 பஸ்கள் தேவைப்படுகிறது என்று என்னிடம் தெரிவித்தனர். முதல்கட்டமாக புதிதாக 5 பஸ்கள் வருகிற 18-ந் தேதி முதல் இயக்கப்படும். இந்த ஆண்டுக்குள் கூடுதல் பஸ்கள் அனைத்தும் இயக்க ஏற்பாடு செய்யப்படும்.

கல்லூரிக்கு கூடுதல் வகுப் பறைகள் வேண்டும் என்று தெரிவித்தனர். அதன்படி கூடுதலாக 20 வகுப்பறைகள், குளிர்சாதன வசதியுடன் கருத்தரங்க அறை கட்டுவதற்கு வீட்டுவசதி துறை சார்பில் ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கி 6 மாத காலத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கல்லூரியின் அனைத்து வகுப்பறைகளிலும் எல்.இ.டி. திரைகள் வசதி செய்யப்படும். கல்லூரிக்கு தேவைப்படும் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப, இதே கல்லூரியில் படித்து முடித்த மாணவிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். கூட்டுறவு துறை வேலைவாய்ப்புகளில் குமரன் மகளிர் கல்லூரியில் படித்து முடிக்கும் மாணவிகளுக்கு முன்னுரிமை கொடுக்குமாறு தெரிவித்துள்ளேன். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு தயாராகும் வகையில் மாணவிகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவிகள் தன்னம்பிக்கையுடன் படித்து உயர்ந்த நிலையை அடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன்(திருப்பூர் தெற்கு), கரைப்புதூர் நடராஜன்(பல்லடம்), விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் கல்லூரி பேரவை தலைவர் ஏஞ்சலின் ஜெனிபர் நன்றி கூறினார். இதில் திரளான மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்