பேஸ்புக்கில் தவறான தகவல்கள் நடிகர் எஸ்.வி.சேகர் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

Update: 2017-08-04 21:30 GMT
சென்னை,

நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

என்னுடைய பெயரில் பேஸ்புக்கில் போலியான கணக்கு ஒன்றை தொடங்கி யாரோ உள்நோக்கத்தோடு பல தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள ஜூலி பற்றியும், ராகுல்காந்தி பற்றியும் அதில் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களுக்கும், எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அது என்னுடைய பொதுவாழ்விற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வெளியாகி உள்ளது. அந்த பதிவுகளை அறவே நீக்கிவிட்டு, அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் அலுவலகத்தில் துணை கமிஷனரை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக துணை கமிஷனர் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் அரசு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுவதில் தவறு இல்லை.

அவர் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும். அதை விட்டுவிட்டு தனிப்பட்ட முறையில் அவரை அமைச்சர்கள் தாக்கிப்பேசுவது சரியல்ல. அமைச்சர் செங்கோட்டையன் கல்வித்துறையில் நல்ல திட்டங்களை செயல்படுத்துகிறார். மின்சாரத்துறையிலும் நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதை பாராட்டத்தானே செய்கிறோம். அதுபோல தவறுகளை சுட்டிக்காட்டும்போது அதை ஏற்றுக்கொண்டு சரிசெய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்