மனைவியுடன் கள்ளத்தொடர்பு: குடும்பத்தை சீரழித்ததால் கட்டிட மேஸ்திரியை கொலை செய்து புதைத்தேன்

குடும்பத்தை சீரழித்ததால் திட்டமிட்டு கட்டிட மேஸ்திரியை கொலை செய்து புதைத்தாக கைதான மாமனார் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2017-08-04 23:30 GMT
வேலூர்,

வேலூர் மாவட்டம் லத்தேரியை அடுத்த கரசமங்கலம் அருகே உள்ள கீழ்ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரியான பழனி (வயது 32) மாயமானது தொடர்பாக லத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் (பொறுப்பு) விசாரணையில் சந்தேகத்தின் பேரில் பழனியின் மாமனார் சுந்தரேசனை பிடித்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், சுந்தரேசனும், சிங்கார ரெட்டியூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சேகர் (42) என்பவரும் சேர்ந்து பழனியை கொலை செய்து, உடலை பொன்னை அருகே உள்ள பொன்னை ஆற்றில் புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து பொன்னையாற்றில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த பழனியின் உடலை போலீசார் நேற்று முன்தினம் தோண்டி எடுத்தனர்.
குடும்பத்தை சீரழித்ததால்..
இது தொடர்பாக சுந்தரேசன் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

பெங்களூருவில் வசித்து வந்த காசியம்மாளை நான் 3-வதாக திருமணம் செய்து கொண்டேன். காசியம்மாளுக்கும் முதல் கணவருக்கும் பிறந்த குப்புவை பழனிக்கு திருமணம் செய்து வைத்தோம். பழனி வேலைக்கு செல்லாமல் குப்புவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் பழனி எனது மனைவி காசியம்மாளுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்ததாக சிலர் என்னிடம் கூறினர். இதனால் எங்களது குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. இந்த பிரச்சினையால் எங்களது குடும்பம் சீரழிந்து விட்டது.

எனவே நான் பழனியை கொலை செய்ய திட்டமிட்டேன். அதற்காக சிங்கார ரெட்டியூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சேகரை கூட்டாளியாக சேர்த்தேன். சம்பவத்தன்று பழனியை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு பொன்னை ஆற்றிற்கு சென்றோம். அங்கு பழனிக்கு அதிகமாக மதுவை ஊற்றி கொடுத்தோம். இதற்கிடையே சேகரை மண்வெட்டி வாங்கி வருமாறு அனுப்பினேன். மண் வெட்டி வாங்கி வந்த பின், நாங்கள் இருவரும் பழனியின் லுங்கியால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்து, மண்வெட்டியால் பள்ளம் தோண்டி உடலை புதைத்தோம்.
இவ்வாறு சுந்தரேசன் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்