காஞ்சீபுரம் வேகவதி ஆற்றின் கரையில் உள்ள குடியிருப்புகளை அகற்றுவது குறித்து அனைத்து கட்சி கூட்டம்
காஞ்சீபுரம் வேகவதி ஆற்றின் கரையில் உள்ள குடியிருப்புகளை அகற்றுவது குறித்து அனைத்து கட்சி கூட்டம் கலெக்டர் பா.பொன்னையா தலைமையில் நடந்தது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் வேகவதி ஆற்றின் கரையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்த குடியிருப்புகளை அகற்ற பொதுப்பணித்துறையினர் 2 நாட்கள் கெடுவிதித்து நோட்டீஸ் வழங்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு வாசிகள் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து குடியிருப்புகளை அகற்றாமல் ஆற்றின் கரையை ஆழப்படுத்தி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என கலெக்டர் பா.பொன்னையாவிடம் மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து குடியிருப்புகளை அகற்றுவது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சியினர் மற்றும் குடியிருப்புவாசிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சவுரிராஜன், வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) இரா.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. சார்பில் வாலாஜாபாத் பா.கணேசன், தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன் மற்றும் இதர கட்சியின் பிரதிநிதிகளும், குடியிருப்பு வாசிகளும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் குடியிருப்பு வாசிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு மாவட்ட கலெக்டர் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார்.