எனது மகன் வீடுகளில் வருமான வரி சோதனை நடக்க சித்தராமையா காரணம் மந்திரி டி.கே.சிவக்குமாரின் தாயார் குற்றச்சாட்டு

‘‘எனது மகன் வீடுகளில் வருமான வரி சோதனை நடக்க சித்தராமையா காரணமாக இருக்கலாம்’’ என்று மந்திரி டி.கே.சிவக்குமாரின் தாயார் பரபரப்பு குற்றச்சாட்டை கூறி இருக்கிறார்.

Update: 2017-08-04 21:00 GMT

பெங்களூரு,

‘‘எனது மகன் வீடுகளில் வருமான வரி சோதனை நடக்க சித்தராமையா காரணமாக இருக்கலாம்’’ என்று மந்திரி டி.கே.சிவக்குமாரின் தாயார் பரபரப்பு குற்றச்சாட்டை கூறி இருக்கிறார்.

தாயார் குற்றச்சாட்டு

மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமாரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் இதுவரை ரூ.11.43 கோடி ரொக்கமும், ரூ.4.4 கோடி மதிப்பிலான தங்க நகைகளையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். மத்திய அரசு அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வருமான வரி சோதனையை நடத்துவதாக முதல்–மந்திரி சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் தனது மகன் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடக்க முதல்–மந்திரி சித்தராமையா காரணமாக இருக்கலாம் என்று டி.கே.சிவக்குமாரின் தாயார் கவுரம்மா பரபரப்பு குற்றச்சாட்டை கூறி இருக்கிறார். இதுகுறித்து அவர் ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

மகனுக்கு எதிராக செயல்படுகிறார்

‘‘எனது மகன் வீடுகளில் வருமான வரி சோதனை நடக்க முதல்–மந்திரி சித்தராமையா காரணமாக இருக்கலாம். எனது மகனால் அவர் அரசியலில் முன்னுக்கு வந்தார். இன்று சித்தராமையா எனது மகனுக்கு எதிராக செயல்படுகிறார். எனது மகனின் முதுகில் குத்துகிறார். தேர்தல் விரைவாக வருவதால் இப்போது நாங்கள் எதையும் சொல்ல முடியாது. சித்தராமையாவும், பா.ஜனதாவினரும் அதுவரை காத்திருக்கட்டும். வருமான வரி சோதனை பற்றி சித்தராமையா கேள்வி கேட்கவில்லை. அவருக்கு அதிகாரம் உள்ளது. அவர் வந்து இதை கேட்டு இருக்க வேண்டும்.’’

இவ்வாறு கவுரம்மா கூறினார்.

சித்தராமையா மறுப்பு

டி.கே.சிவக்குமாரின் தாயார் கூறியுள்ள இந்த குற்றச்சாட்டு குறித்து முதல்–மந்திரி சித்தராமையாவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதுபற்றி அவர் கருத்துக்கூற மறுத்துவிட்டார்.

மேலும் செய்திகள்