பெங்களூரு லால்பாக்கில் சுதந்திர தினவிழா மலர் கண்காட்சி கவர்னர் வஜூபாய் வாலா தொடங்கி வைத்தார்

பெங்களூரு லால்பாக்கில் சுதந்திர தினவிழா மலர் கண்காட்சியை கவர்னர் வஜூபாய் வாலா தொடங்கி வைத்தார்.;

Update: 2017-08-04 22:00 GMT

பெங்களூரு,

பெங்களூரு லால்பாக்கில் சுதந்திர தினவிழா மலர் கண்காட்சியை கவர்னர் வஜூபாய் வாலா தொடங்கி வைத்தார்.

குவெம்புவை பெருமைப்படுத்தும் வகையில்...

பெங்களூரு லால்பாக்கில் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 15–ந் தேதி சுதந்திர தினத்தையொட்டி லால்பாக்கில் மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கண்காட்சியின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் கவர்னர் வஜூபாய் வாலா கலந்து கொண்டு மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

ஒவ்வொரு மலர் கண்காட்சியிலும் ஒரு சிறப்பு அம்சமாக ஏதாவது வரலாற்று கட்டிடம், நினைவு சின்னங்கள் பூக்களால் வடிவமைக்கப்பட்டு பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்து அளிக்கப்படும். அந்த வகையில் இந்த முறை மலர் கண்காட்சியில் மறைந்த கவிஞரும், ஞானபீட விருது பெற்றவருமான குவெம்புவை பெருமைப்படுத்தும் வகையில் அவர் வாழ்ந்த வீட்டின் மாதிரி கண்ணாடி மாளிகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நுழைவு கட்டணம் ரூ.50

சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிற ரோஜா மலர்கள் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான ரோஜாக்கள் இதில் இடம் பெற்றுள்ளன. ஜோக் நீர்வீழ்ச்சியின் மாதிரி உள்பட மலைநாடு மாவட்ட சுற்றுலா தலங்களின் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. இது தவிர பார்வையாளர்களை கவர மலர்களால் வடிவமைக்கப்பட்ட மயில், வண்ணத்துப்பூச்சி உள்பட ஏராளமான வண்ணமயமான உருவங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

இந்த கண்காட்சி சுதந்திர தினமான 15–ந் தேதியுடன் முடிவடைகிறது. கண்காட்சியை பார்க்க வார நாட்களில் வரும் பெரியவர்களுக்கு நுழைவு கட்டணம் ரூ.50 எனவும், விடுமுறை நாட்களில் ரூ.60 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் சிறுவர், சிறுமிகளுக்கு கட்டணம் ரூ.20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ–மாணவிகள் கண்காட்சியை பார்க்க இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என்று தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறினர்.

கண்காணிப்பு கேமராக்கள்

லால்பாக்கில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க 500–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 100 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தீயணைப்பு, ஆம்பலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. லால்பாக்கிற்கு மெட்ரோ ரெயில் வசதி இருப்பதால் இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்