பட்டிவீரன்பட்டி அருகே மதுக்கடையை மூடக்கோரி தாசில்தாரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

மதுக்கடையை மூடக்கோரி தாசில்தாரை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2017-08-04 23:00 GMT
பட்டிவீரன்பட்டி,

பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம் பகுதிகளில் செயல்பட்டு வந்த மதுக்கடைகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மூடப்பட்டன. அவை மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு திறக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திண்டுக்கல்- வத்தலக்குண்டு சாலையில் சாலைப்புதூர் பகுதியில் செயல்பட்டு வந்த மதுக்கடையை தேவரப்பன்பட்டி பிரிவு அருகே விவசாய நிலத்தில் அமைக்க டாஸ்மாக் பணியாளர்கள் முடிவு செய்தனர்.
இதற்கான கட்டிட பணிகள் நடந்து வந்தன. இந்த இடத்தை சுற்றி தென்னந்தோப்புகள், பள்ளி, திருமண மண்டபம், கிறிஸ்தவ தேவாலயம், பஸ்நிறுத்தம் உள்ளன. எனவே அங்கு மதுக்கடை அமைக்கக்கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கு மதுக்கடை திறக்கப்பட்டது.

இதனால் அங்கு மதுப்பிரியர்களின் கூட்டம் எப்போதும் அலைமோதுகிறது. மதுவை வாங்கி தென்னந்தோப்புகளில் வைத்து குடிக்கின்றனர். பின்னர் அங்கேயே படுத்து கிடப்பதுடன், மதுபாட்டில்களையும் வீசி செல்கின்றனர். அதுமட்டுமின்றி அந்த வழியாக நடந்து செல்பவர்களிடமும் தகராறில் ஈடுபடுகின்றனர்.

இதனால் அந்த பகுதியே திறந்தவெளி மதுபாராக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொழிலாளர்கள் தோட்டங்களுக்கு வேலைக்கு கூட செல்ல முடியவில்லை என்று கூறப்படுகிறது. மதுக்கடையை மூடக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்கிடையே மதுக் கடையை மூடக்கோரி பட்டிவீரன்பட்டியை சேர்ந்த மாடசாமி என்பவர், மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு, இதுகுறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில், ஆத்தூர் தாசில்தார் ராஜகோபால், வருவாய் ஆய்வாளர் சுமதி, கிராம நிர்வாக அலுவலர் மாதவன் ஆகியோர் மதுக்கடையை ஆய்வு செய்வதற்காக அங்கு சென்றனர். அந்த வேளையில் மதுக்கடையை மூடக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீரென தாசில்தார் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

இதைத்தொடர்ந்து தாசில்தார் ராஜகோபால் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஐகோர்ட்டின் உத்தரவுப்படி ஆய்வு செய்ய வந்ததாகவும், மதுக்கடையை மூடக்கோரி மனு அளித்தால் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். பின்னர் இதுதொடர்பாக மனு ஒன்றை தாசில்தாரிடம் பொதுமக்கள் கொடுத்தனர்.
அதன்பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தாசில்தாரை முற்றுகையிட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்