மது போதையுடன் சிகிச்சை அளிக்க வந்த அரசு டாக்டர்; நோயாளிகள்- செவிலியர்கள் அதிர்ச்சி

சுல்தான் பேட்டை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் மது அருந்தி விட்டு போதையுடன் சிகிச்சை அளிக்க வந்த அரசு டாக்டரால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நோயாளிகள், செவிலியர்கள் அதிர்ச்சிஅடைந்தனர்.

Update: 2017-08-04 23:30 GMT
சுல்தான்பேட்டை,

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் வாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வா.சந்திராபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, வாரப்பட்டி, சுல்தான்பேட்டை, காம நாயக்கன்பாளையம், வி.மேட்டூர், கந்தம்பாளையம், குளத்துப்பாளையம், பூசாரிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் காய்ச்சல், தலைவலி, பல் வலி, காயம் உள்பட பல நோய்களுக்கு தினமும் சிகிச்சை பெறுகின்றனர். இது தவிர இங்கு 24 மணி நேரம் இலவசமாக பிரசவமும் பார்க்கப்படுகிறது.

இந்த சுகாதாரநிலையத்தில் பொள்ளாச்சியைச் சேர்ந்த டாக்டர் ராமசாமி கடந்த 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த புதன்கிழமை இரவுப்பணிக்கு வரும்போது நன்கு மது அருந்தி விட்டு வந்துள்ளார். போதை தலைக்கு ஏறியதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மயங்கி கீழே விழுந்தார். இதனை கண்ட செவிலியர்கள் மற்றும் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சுதாரித்த இரவுப்பணி ஊழியர்கள் அவரை கைத்தாங்கலாக அழைத்து சென்று அங்கிருந்த ஆம்புலன்ஸ் வேனில் படுக்க வைத்தனர். அப்போது அவர் போதையில் உளறிக்கொண்டே இருந்துள்ளார். பின்னர் அவர் நன்றாக தூங்கி விட்டார்.

ஏழை, எளியமக்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கும் சிறந்த டாக்டர் என பெயர் எடுத்திருந்த டாக்டர் ராமசாமி சமீபத்தில் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவர் போதையில் மதிமயங்கியதால் நோயாளிகளுக்கு சிகிச்சைஅளிக்க முடியவில்லை. இதனால் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். உயிர் காக்கும் உன்னதப் பணியில் இருக்கும் டாக்டர் இவ்வாறு நடந்து கொண்ட செயல் பொதுமக்கள் மற்றும் நோயாளிகளிடம் கடும் அதிருப்தியை ஏற் படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்