கோவையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் பதுங்கலா?

கோவையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் பதுங்கி உள்ளார்களா? என்ற சந்தேகத்தின் பேரில் 2 வாலிபர்களை பிடித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-08-04 09:41 GMT
கோவை

கோவையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் பதுங்கி உள்ளார்களா? என்ற சந்தேகத்தின் பேரில் 2 வாலிபர்களை பிடித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து டி.வி.டி., மடிக்கணினி, செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அரபு நாடுகளில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்களா?. இந்த இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் பணிகளில் யாராவது ஈடுபட்டு வருகிறார்களா? என்று நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு நடத்தி வருகிறார்கள்.

ஐ.எஸ். இயக்க தீவிரவாதிகளுடன் முகநூல் மற்றும் ஆன்லைன் மூலமும், நவீன தகவல் தொழில்நுட்ப கருவிகளுடனும் தொடர்பு கொள்பவர்கள் யார்? யார்? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலம் கண்ணனூர் அருகில் உள்ள கனகமலை பகுதியில் கடந்த ஆண்டு ஐ.எஸ். இயக்க ஆதரவாளர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். கேரளாவை சேர்ந்த சஜீர் மங்களாசேரி என்பவர் வெளிநாடுகளில் பதுங்கி இருந்து ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவு திரட்டியதாகவும், கைதான 6 பேர் அவருடன் தொடர்பில் இருந்தாகவும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு கோவையில் 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையின் அடிப்படையிலும், முகநூலில் ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவு தகவலை பரப்பியவர்கள் என்ற சந்தேகத்திலும் கோவையில் நேற்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.

கோவை கரும்புக்கடை, ஆசாத்நகர் பள்ளிவாசல் வீதியை சேர்ந்த முகமது அப்துல்லா (வயது27), கோவை ஜி.எம்.நகர் கோட்டைபுதூரை சேர்ந்த அப்துல்ரகுமான் (24) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்த கொச்சியில் உள்ள கோர்ட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆணை பெற்றனர். இதன்பின்னர் கூடுதல் துணை சூப்பிரண்டு சவுகத் அலி தலைமையில் 15 பேர் நேற்று கோவை வந்தனர்.

அவர்கள் 2 பிரிவுகளாக நேற்று மாலை 5 மணியளவில் முகமது அப்துல்லா, அப்துல்ரகுமான் ஆகியோரின் வீடுகளுக்கு சென்றனர். 2 பேரும் வீட்டில் இருந்ததால் அவர்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினார்கள். முகமது அப்துல்லா கரும்புக்கடை பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி மற்றும் இணையதள மையம் நடத்தி வருகிறார். அந்த கடையிலும் சோதனை நடைபெற்றது.

இதில், முகமது அப்துல்லா என்பவரது வீட்டில் இருந்து இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்த ஜாகீர்நாயக் தொடர்பான டி.வி.டி., மத பிரசங்கம் தொடர்பான 77 டி.வி.டி.கள், ஒரு மடிக்கணினி, 2 செல்போன்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அப்துல்ரகுமான் வீட்டில் இருந்து செல்போன்கள் மற்றும் சில டி.வி.டி.கள் பறிமுதல் செய்யப்பட்டன.

2 வாலிபர்களையும் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து இரவில் மீண்டும் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்றது.

பிடிபட்ட முகமது அப்துல்லா, மாற்றுத்திறனாளியான உறவினரை அழைத்துக்கொண்டு இன்னும் ஒரு சில நாட்களில் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருந்தார். அதற்குள் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் சோதனையில் சிக்கிக்கொண்டார். சவுதிஅரேபியாவுக்கு முகமது அப்துல்லா ஹஜ் பயணத்துக்கு செல்ல முடிவு செய்தாரா? அல்லது அங்கிருந்து வேறு நாடுகளுக்கு செல்ல முடிவு செய்தாரா? என்றும் விசாரணை நடைபெறுகிறது.

2 பேர் பிடிபட்டது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் என்ற சந்தேகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 2 பேரின் வீடுகளில் இருந்தும் டி.வி.டி.கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பாஸ்போர்ட்டுகளையும் கைப்பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. 2 பேரும் கைது செய்யப்படுவார்களா? அல்லது விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்படுவார்களா? என்று பின்னர்தான் முடிவு செய்யப்படும்’ என்றனர்.

ஐ.எஸ். தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 2 பேர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றதால் கோவை கரும்புக்கடை மற்றும் ஜி.எம்.நகர் கோட்டைபுதூர் பகுதியில் திரளான பொது மக்கள் கூடினார்கள். இதனால் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

பிடிபட்ட 2 பேரும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டு விசாரணை நடைபெற்றதால் அங்கும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்