மூன்றாம் இடம் பிடித்த செயலி

மொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையவை என அறிய உதவும் மிகப் பயனுள்ள செயலி “ட்ரூ காலர்”.

Update: 2017-08-04 06:30 GMT
மொபைல் போன்களில் நமக்கு வரும் அழைப்புகள் யாருடையவை என அறிய உதவும் மிகப் பயனுள்ள செயலி “ட்ரூ காலர்”. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். மொபைல் போன் பயன்படுத்தும் 20 கோடி பேரில், 13 கோடி பேர் இதனைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் மட்டும்இருந்து இதன் சர்வரில், 170 கோடிக்கு மேற்பட்ட எண்கள் உள்ளன. தினந்தோறும் 12 கோடி ஸ்பேம் அழைப்புகள் தடுக்கப்படுகின்றன. தினந்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள், இதனைப் புதிதாகப் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள்.

‘ட்ரூ காலர்’ செயலியினை ஸ்கேண்டிநேவியா நாட்டின் ட்ரூ சாப்ட்வேர் ஸ்கேண்டிநேவியா என்னும் நிறுவனம் வழங்குகிறது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 31 வயதே நிரம்பிய மாமெடி, நாமி ஆகிய இருவரும், தங்களுக்கு வேலை தரும் நிறுவன உரிமையாளர்களின் மொபைல் எண்களை அறிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அது மட்டுமின்றி, மாமெடிக்கு பன்னாட்டுஅளவில் அழைப்பு வந்த போது, அதை வடிகட்டி, முக்கிய தொலைபேசி அழைப்புகளை மட்டும் ஏற்றுக் கொள்ளும் வழியைக் காண திட்டமிட்டார்.

முதலில் சிறிய அளவில், ‘ட்ரூ காலர்’ செயலியை உருவாக்கி, இணைய தளம் ஒன்றில் அனைவருக்கும் வழங்கிய போது, முதல் வாரத்திலேயே, 10 ஆயிரம் பேருக்கு மேலாக, இதனைத் தரவிறக்கம் செய்தது தெரிய வந்தது. இதுவே அவர்களுக்கு ஊக்கத்தைத் தந்து, அதனை மேம்படுத்தும் பணியில் இறங்கச் செய்தது. தாங்கள் பார்த்து வந்த பணியில் இருந்து விலகி, ‘ட்ரூ காலர்’ வடிவமைக்கும் பணியில் இறங்கினர். இன்று அவர்கள் வடிவமைத்து இலவசமாகத் தரும் செயலி, உலகின் மிகப் பெரிய தொலைபேசி பேரேட்டினைக் கொண்டுள்ளது. அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில், மூன்றாவது இடத்தை ட்ரூ காலர் பெற்றுள்ளது. முதல் இரண்டு இடத்தினைப் பெற்றவை, பேஸ்புக், வாட்ஸ் -அப் செயலிகள்.

ட்ரூ காலர் செயலிக்கு நம் எண்கள் எப்படி கிடைக்கின்றன? இந்தக் கேள்வி, இந்த செயலியைப் பயன்படுத்துபவர்கள் மனதில் முதலில் எழுகிறது. இந்த செயலியைப் பயன்படுத்த ஒருவர் அதனைத் தரவிறக்கம் செய்து, பதிந்து கொள்கையில், ட்ரூ காலர் செயலி அவரின் மொபைல் போனில் உள்ள, தொலைபேசி எண்கள் அடங்கிய தொகுப்பினைப் பெற்றுக் கொள்ள சம்மதம் கேட்டுப் பெறுகிறது. “ஒருவரின் சம்மதம் இன்றி அவர் மொபைல் போன்களில் முகவரிப் பிரிவுகளில் உள்ள எண்களை எடுப்பதில்லை” என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்