‘நீட்’ தேர்வு பெயரை சொல்லி ‘கல்லாகட்டும்’ பள்ளிக்கூடங்கள்

நீட் தேர்வு வந்தாலும் வந்தது, மருத்துவம் படிக்க விரும்பும் மாணவ- மாணவிகள் மட்டுமின்றி, பெற்றோர் மத்தியிலும் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.

Update: 2017-08-04 05:41 GMT
நீட் தேர்வு வந்தாலும் வந்தது, மருத்துவம் படிக்க விரும்பும் மாணவ- மாணவிகள் மட்டுமின்றி, பெற்றோர் மத்தியிலும் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டு நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்குமா என்ற கேள்வி இன்னும் நீடித்துக்கொண்டு இருந்தாலும், நீட் தேர்வை எதிர்கொள்வதற்காக தனியார் பள்ளிகள் மாணவ-மாணவிகளை தயார்படுத்த இப்போதே களமிறங்கிவிட்டன.

‘நீட்’ என்பது தேசிய அளவிலான தேர்வு என்பதால் நாடு முழுவதும் உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் போதிய பயிற்சியை தமிழகத்தை சேர்ந்தவர்கள் பெறவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதை கருத்தில் கொண்டு பல தனியார் பள்ளிகள் இப்போதே பிளஸ்-1, பிளஸ்-2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சியை அளிப்பதற்கான ஏற்பாடுகளை தொடங்கிவிட்டன.

பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளிடையே ‘நீட்’ தேர்வு எழுத ஆர்வம் காட்டுவோரின் பெயர் பட்டியல்களை தயாரித்து, அதற்கான கட்டண விவரங்களையும் சில பள்ளிகள் தெரிவித்துவிட்டன.

பெரும்பாலான பள்ளிகளில் ஒரு ஆண்டுக்கான நீட் தேர்வு பயிற்சி கட்டணம் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக்கூடங்கள் திறந்து 2 மாதங்களே ஆகியிருப்பதால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு வழக்கமான கட்டணத்தை செலுத்தி பண நெருக்கடியை சந்தித்திருப்பார்கள் என்று கருதும் பல பள்ளிகள், நீட் பயிற்சிக்கான கட்டணத்தை 3 தவணையாக செலுத்தலாம் என்றும் சலுகை வழங்கி இருக்கின்றன.

இந்த பயிற்சியை பெறுவோருக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்புகளை நடத்துவதா, அல்லது அன்றாட வகுப்புகள் முடிந்தபிறகு தினமும் கூடுதலாக 1 மணிநேரம், அல்லது 2 மணிநேரம் என நடத்துவதா என்று பலவிதமாக பள்ளி நிர்வாகத்தினர் யோசித்து வருகின்றனர். மேலும் நீட் பயிற்சியை வழங்க ஆசிரியர் குழுக்களையும் பள்ளிகள் தயார் செய்து வருகின்றன.

இதுபற்றி கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நீட் தேர்வு என்பது வரவேற்கக் கூடியது என்றாலும், நம் நாட்டில் பல மாநிலங்களில் கல்விக் கொள்கைகள் மாறுபடுகின்றன. கடந்த சில ஆண்டுகள் வரை தமிழகத்தில் மெட்ரிக்குலேஷன், மாநில பாடத்திட்டக் கல்வி (ஸ்டேட் போர்டு) என்றெல்லாம் கற்பிக்கப்பட்டு வந்தது. சமச்சீர் கல்வி முறை வந்தபிறகே அனைத்து பாடத்திட்டமும் ஒன்றாக மாறியது. இதேபோல் பல மாநிலங்களில் பாடத்திட்டங்களில் மாறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் நீட் தேர்வு வந்தபிறகு பல மாநிலங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளின் மனதுக்குள் எழும் அச்சம், நம்மால் சாதிக்க முடியுமா என்பதுதான்.

அதற்கு காரணம், நீட் தேர்வில் கேட்கப்படும் பெரும்பாலான கேள்விகள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படுவதே. அதற்காக சி.பி.எஸ்.இ. படித்தவர் களால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்று நினைப்பதுவும் தவறு. தீவிர முயற்சியும், முறையான பயிற்சியும் இருந்தால் எந்த தேர்விலும் வெற்றிபெறலாம். நாடு முழுவதும் ஒரே கல்விக் கொள்கை வரும் பட்சத்தில் ஒவ்வொரு மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளின் திறன் வெளிப்படும். அப்போது தமிழகத்தை சேர்ந்தவர்களும் நிச்சயம் சாதிப்பார்கள்.

நீட் பயிற்சி அளிக்க பள்ளிகள் தயாராகிவிட்டன என்பது நல்ல விஷயம்தான் என்றாலும், இதை வைத்து பள்ளிகள் பெற்றோர்களிடம் அதிக கட்டணத்தை கறந்துவிடக் கூடாது என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியதாகும். பயிற்சிக் கட்டணமாக பள்ளிகள் தங்கள் இஷ்டம்போல் ஆயிரக்கணக்கில் வசூலிக்கக்கூடாது.

இதை கண்காணிப்பது பற்றி அரசிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை. தமிழக மாணவ-மாணவிகள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களிலும் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. அதற்காகத்தான் பிளஸ்-1 தேர்வும் பொதுத்தேர்வாக மாற்றப்பட்டு இருக்கிறது. மேலும் அரசு பள்ளிகளிலும் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

-முக்கூடற்பாசன்.

மேலும் செய்திகள்