சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

அரியாங்குப்பத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2017-08-03 22:32 GMT
அரியாங்குப்பம்,

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வருகிற 25-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுவை மாநிலம் அரியாங்குப்பத்தில் பழைய பூரணாங்குப்பம் வீதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மயில், அன்னம், சிங்கம், மாடு, மான், தாமரை, குறிஞ்சிப்பூ போன்றவற்றின் மீது விநாயகர் அமர்ந்திருப்பது, நர்த்தன விநாயகர், ஐந்துமுக சிங்க விநாயகர், சிவன், பார்வதி, முருகன் குடும்பத்துடன் இருப்பதுபோன்ற விநாயகர், நந்தி விநாயகர் உள்ளிட்ட பலவிதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. 1 அடி முதல் 13 அடி உயரம் வரை பல்வேறு அலங்காரத்தில், விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறது.

விலை உயரும்

இதுகுறித்து விநாயகர் சிலை செய்யும் தொழிலாளி கோவிந்தராஜ் கூறுகையில், சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் காகித கூழ், கிழங்கு மாவு ஆகியவற்றால் விநாயகர் சிலை தயாரிக்கப்படுகிறது. இவற்றை தண்ணீரில் கரைப்பதால் நீர்மாசுபாடு ஏற்படாது. இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை மாநிலத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த விழாக்குழுவினர் வாங்கி செல்ல ‘ஆர்டர்’ கொடுத்துள்ளனர்.

சிலைகளின் உயரம் மற்றும் கலைநயத்துக்கு ஏற்ப ரூ.3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது சரக்கு மற்றும் சேவை வரியால் மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிலைகளின் விலை சற்று கூடுதலாகவே இருக்கும் என்றார். 

மேலும் செய்திகள்