மதுபான பார் கேஷியரை கத்தியால் குத்திய ரவுடிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
மதுபான பார் கேஷியரை கத்தியால் குத்திய ரவுடிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
திருக்கனூர்,
திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு பகுதியை சேர்ந்தவர் நடராஜமூர்த்தி (வயது 38), தனியார் மதுபான பார் கேஷியர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி குமரனுக்கும் (34) முன்விரோதம் இருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு மணலிப்பட்டு சாலையில் நடந்து சென்ற நடராஜமூர்த்தியை குமரன் கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த நடராஜமூர்த்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, உயிர் பிழைத்தார். இது தொடர்பாக திருக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரனை கைது செய்தனர்.
இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த குமரன் திடீரென்று தலைமறைவானார். அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் கூனிச்சம்பட்டு பகுதியில் கத்திய காட்டி பொதுமக்களை மிரட்டிய குமரனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
5 ஆண்டுகள் சிறை தண்டனை
இந்த நிலையில் புதுச்சேரி கோர்ட்டில் நடைபெற்று வந்த கத்திக்குத்து வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட குமரனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எழிலரசி உத்தரவிட்டார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுப்பவிக்கவேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் முத்துவேல் ஆஜரானார்.
ரவுடி குமரன் மீது திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் அடிதடி, கொலைமுயற்சி வழக்கும், சென்னையில் வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி போன்ற வழக்குகளும் உள்ளன.