புனேயில் சிறுமியை கொலை செய்து உடல் புதைப்பு காய்கறி வியாபாரி கைது

புனேயில் சிறுமியை கொலை செய்து உடலை புதைத்த காய்கறி வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-08-03 21:36 GMT

மும்பை,

புனேயில் சிறுமியை கொலை செய்து உடலை புதைத்த காய்கறி வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

சிறுமி மாயம்

புனே பிம்பிரி பகுதியை சேர்ந்த சிறுமி சாக்ஷி (வயது15). கடந்த 30–ந் தேதி வெளியில் சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. பெற்றோர் எங்கு தேடியும் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து பிம்பிரி போலீசில் பெற்றோர் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் அங்கு காய்கறி வியாபாரம் செய்து வரும் ரபீக் இம்ரான் சேக் (33) என்பவரது கடைக்கு சிறுமி சென்றது தெரியவந்தது. எனவே போலீசார் சிறுமி குறித்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

கொன்று புதைப்பு

அப்போது அவர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினார்கள். அப்போது சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை தனது காய்கறி குடோனுக்குள் புதைத்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

போலீசார் உடனே குடோனில் சென்று சிறுமியின் உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் அவளது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரபீக் இம்ரான் சேக்கை கைது செய்தனர். சிறுமியை என்ன காரணத்திற்காக கொலை செய்தார்? பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொன்றாரா? என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்