ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கோவிலில் மலைபோல் குவிந்த சாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி சிங்கம்புணரி முத்துவடுகநாதர் கோவிலில் மலைபோல் சாதம் குவித்து வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

Update: 2017-08-03 22:45 GMT
சிங்கம்புணரி,

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பிரசித்தி பெற்ற சித்தர் முத்துவடுக நாதர் கோவில், வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவில், பாரதிநகர் நொண்டிகருப்பர் ஆகிய கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதான விழா நடைபெற்றது. விழாவில் சித்தருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சித்தர் வடுகநாதர் வெள்ளி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தொடர்ந்து மலைபோல் குவித்துவைக்கப்பட்ட சாதத்திற்கு சிறப்பு பூஜை, வழிபாடு செய்யப்பட்டு அதன்பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சித்தர் முத்து வடுக நாதர் கோவிலில் வணிகர் நலச்சங்கம் மற்றும் அன்னதான குழு சார்பாக அன்னதானம் நடைபெற்றது.

சிங்கம்புணரி, பிரான்மலை, காளாப்பூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும், மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டத்தில் இருந்தும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த அன்னதான விழாவில் கலந்துகொண்டனர். விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதே போல் காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து அன்னதான விழா நடைபெற்றது. இதில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் நொண்டி கருப்பர் கோவிலில் நடைபெற்ற விழாவில் கருப்பருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்து. நேற்று நடைபெற்ற ஆடிப்பெருக்கு விழாவால் சிங்கம்புணரி பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் சமையல் பணிகள் செய்யாமல் கோவில்களில் நடைபெற்ற அன்னதானத்தில் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்