ரகசிய காப்பு பிரமாணத்தை மீறியதாக வழக்கு: முதல்-அமைச்சர், 4 அமைச்சர்களுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

ரகசிய காப்பு பிரமாணத்தை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் முதல்-அமைச்சரும், 4 அமைச்சர்களும் பதிலளிக்குமாறு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2017-08-03 22:30 GMT
மதுரை,

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தாமரைக்கனியின் மகன் ஆணழகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சசிகலாவை முதல்-அமைச்சராக்கும் நோக்கத்தில் 129 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் விடுதியில் சிறை வைக்கப்பட்டனர். அவர்களில் சிலர் அங்கிருந்து தப்பி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்தனர். பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதனால் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சரானார்.

அவரும், அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் கே.ராஜூ, திண்டுக்கல் சி.சீனிவாசன், ஆர்.காமராஜ் ஆகியோரும் பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்து அரசின் செயல்பாடுகள் குறித்து விவாதித்ததாக செய்திகள் வெளியாயின. இது அவர்கள் பதவியேற்கும்போது எடுத்த ரகசிய காப்பு பிரமாணத்தை மீறியதாகும். எனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் 4 அமைச்சர்களை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் வக்கீல் வாதிடுகையில் “மனுதாரர் தரப்பில் சி.டி. ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சிறையிலுள்ள சசிகலாவின் உத்தரவின்பேரில் அரசு நிர்வாகம் செயல்படுவது தெரிகிறது. மேலும் அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைச்சர்களும் சிறையில் சென்று சசிகலாவை சந்தித்துள்ளனர். இது ரகசிய காப்பு பிரமாணத்துக்கு எதிரானது. அரசு நிர்வாகம் ஒவ்வொரு நாளும் சசிகலாவின் அறிவுறுத்தலின் பேரில் நடக்கிறது. இதை முதல்- அமைச்சர் கண்டிக்கவில்லை. எனவே, இவர்களது செயல் ரகசிய காப்பு உறுதிமொழிக்கு எதிராக உள்ளது. சிறையிலுள்ள மூன்றாம் நபரின் அறிவுறுத்தலின் பேரில், அரசு நடப்பதாக கூறியுள்ளதை சம்பந்தப்பட்டவர்கள் தரப்பில் மறுக்கவில்லை“ என்று வாதாடினார்.


இதனை பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு:-

இந்த வழக்கில் போதுமான முகாந்திரம் உள்ளதாக இந்த நீதிமன்றம் கருதுவதால், விளக்கம் பெறும் வகையில் முதல்-அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டியுள்ளது. எனவே, சபாநாயகர், சட்டப்பேரவை செயலர், தலைமை தேர்தல் ஆணையர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் ஆகியோர் பதிலளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்.

இவ்வாறு கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர். 

மேலும் செய்திகள்