எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா திருவாரூரில் இன்று பந்தல்கால் நடும் விழா 9 அமைச்சர்கள் பங்கேற்பு

திருவாரூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வருகிற 19-ந்தேதி நடை பெறுகிறது. இதையொட்டி இன்று(வெள்ளிக் கிழமை) பந்தல்கால் நடும் விழா நடைபெறுகிறது. இதில் 9 அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர்.

Update: 2017-08-03 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் அரசு சார்பில் வருகிற 19-ந்தேதி(சனிக்கிழமை) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள் கிறார். இதற்காக திருவாரூர் வன்மீகபுரத்தில் உள்ள திடலில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பந்தல்கால் நடும் விழா இன்று(வெள்ளிக் கிழமை) காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ. செங்கோட்டையன், பி.தங்கமணி, வேலுமணி, காமராஜ், ஓ.எஸ். மணியன், துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்கின்றனர். அதைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு மாணவ- மாணவிகளுக்கு தனி தனியாக மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. திருவாரூர் நகராட்சி அலுவலகம் அருகில் இருந்து மாணவிகளுக்கான மாரத்தான் போட்டியையும், திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து மாணவர்களுக்கான மாரத்தான் போட்டியையும் அமைச்சர்கள் தொடங்கி வைக்கின்றனர்.

பின்னர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி, திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெறும் பட்டிமன்றம், திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும் கவிதை போட்டிகளை அமைச்சர்கள் பார்வையிடுகின்றனர். பிற்பகல் 12 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விழா தொடர்பான ஆலோசனை கூட்டத்திலும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். மேற்கண்ட தகவலை அமைச்சர் காமராஜ் நேற்று திருவாரூரில் நிருபர் களிடம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுவினியோக திட்டத்தின் கீழ் உணவு பொருட்கள் அனைவருக்கும் தங்கு தடையின்றி வழங்கப்படுகிறது. மேலும் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொருட்களின் விலையை உயர்த்தாமலும், மானியத்தை குறைக்காமலும் பொதுவினியோக திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக அமைச்சர் காமராஜ் திருவாரூர்-தஞ்சை சாலையில் வன்மீகபுரத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டார். அவருடன் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, உதவி கலெக்டர் முத்துமீனாட்சி, மருத்துவகல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் உள்பட பலர் சென்று இருந்தனர்.

மேலும் செய்திகள்