அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் உறவினர்கள் முற்றுகை போராட்டம்

குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் உறவினர்கள் முற்றுகை போராட்டம்

Update: 2017-08-03 22:30 GMT
குமாரபாளையம்,

குமாரபாளையம் பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தால் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் இருந்த ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டன. இந்த நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. நகராட்சி மூலமும் கடந்த 2 நாட்களாக தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிது. இதனால் ஆஸ்பத்திரியில் உள்ள கழிவறைகளில் துர்நாற்றம் வீச தொடங்கியது.

இந்த நிலையில் இந்த ஆஸ்பத்திரியில் 30-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை பார்க்க நேற்று முன்தினம் இரவு ஆஸ்பத்திரிக்கு வந்த உறவினர்கள், தண்ணீர் வினியோகம் இல்லாததை கண்டித்து திடீரென ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த குமாரபாளையம் தாசில்தார் ரகுநாதன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தார். மேலும் தனியார் லாரி மூலம் உடனடியாக தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து நோயாளிகளின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் ஆஸ்பத்திரி வளாகத்தில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்