சங்ககிரியில் தீரன் சின்னமலை நினைவிடத்தில் 3 அமைச்சர்கள் அஞ்சலி

சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்தில் 3 அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். புதிய நீரூற்று பூங்காவையும் அவர்கள் திறந்து வைத்தனர்.

Update: 2017-08-03 23:00 GMT
சங்ககிரி,

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடமான சேலம் மாவட்டம் சங்ககிரியில் நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று அப்போதைய முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதா அறிவித்தார். அத்துடன் ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் உத்தரவிட்டார். அதன்படி சேலம் மாவட்டம், சங்ககிரியில் ரூ.60 லட்சம் மதிப்பில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு சின்னம் அமைக்கப்பட்டு காணொலி காட்சி மூலம் 23.12.2013 அன்று ஜெயலலிதா திறந்து வைத்தார். சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவுநாள் நேற்று தமிழக அரசு சார்பில் கடைபிடிக்கப்பட்டது.

அதையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி மலைக்கோட்டை மற்றும் நினைவு சின்னம் அமைந்துள்ள இடங்களில் அவரது உருவப்படத்திற்கு தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா மற்றும் சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் ஆகியோர் மலர் வளையம் வைத்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின்படி, தீரன் சின்னமலை நினைவிடத்திற்கு பின்புறம் நீரூற்று பூங்கா அமைக்கப்பட்டது. அதனை 3 அமைச்சர்களும் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

நிகழ்ச்சியில் சங்ககிரி தொகுதியை சேர்ந்த ராஜா எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஜி.வெங்கடாசலம், ஏ.பி.சக்திவேல், மனோன்மணி, ஆர்.எம்.சின்னத்தம்பி, பொன்.சரஸ்வதி, கே.பி.பி.பாஸ்கர், சேலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் சின்னுசாமி, சங்ககிரி ஒன்றிய செயலாளர் மணி, பேரூர் செயலாளர் செல்லப்பன் மற்றும் சங்ககிரி உதவி கலெக்டர் ராம.துரைமுருகன் உள்ளிட்ட அனைத்துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் தீரன் சின்னமலை நினைவிடத்தில் உள்ள உருவப்படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமையில் மாநில துணை பொதுச்செயலாளர் கண்ணையன், மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, தலைவர் பாலசுப்பிரமணி, சங்ககிரி நகர செயலாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிறுவன தலைவர் ஈஸ்வரன் தலைமையில் தெற்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தீரன் சின்னமலை நினைவிடத்தில் உள்ள உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதுபோல மாவீரன் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை மாநில பொருளாளர் கந்தசாமி தலைமையில், மாநில பொறுப்பாளர் வடிவேல், தாமரைச்செல்வன் ஆகியோர் தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

கொங்கு வேளாளர்கள் கூட்டமைப்பு சங்க தலைவர் கே.சி.காளியண்ணன் தலைமையில் பொருளாளர் பொன்.கோவிந்தராஜ், அறக்கட்டளை தலைவர் சண்முகம், துணைத்தலைவர் குமரவேல், தலைமை நிலைய செயலாளர் நல்லமுத்து, சங்ககிரி கொங்குவேளாளர் இளைஞர் சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் பாலு, பொருளாளர் முருகேசன், பி.எஸ்.ஜி. கல்லூரி தாளாளர் மணி, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க சம்மேளன தலைவர் குமாரசாமி, சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் செய்திகள்