ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா: 132 பேருக்கு ரூ.49 லட்சம் நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் வழங்கினார்கள்

ஒகேனக்கல்லில் நடந்த ஆடிப்பெருக்கு விழாவில் 132 பேருக்கு ரூ.49 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் வழங்கினார்கள்.;

Update: 2017-08-03 23:00 GMT
பென்னாகரம்,

தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா நேற்று தொடங்கியது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் ராமமூர்த்தி, வேளாண்மை இணை இயக்குனர் சுசீலா, சுற்றுலா அலுவலர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன் வரவேற்று பேசினார்.

விழாவை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கி வைத்து பேசியதாவது:- இந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படும் ஒகேனக்கல்லில் உள்ள பாறைகள் கார்போ நைட்ரேட் தன்மை கொண்டவை. இந்த பாறைகளை தழுவியபடி ஓடிவரும் காவிரி ஆற்று நீர் இங்கு மருத்துவ குணம் கொண்டதாக மாறுகிறது. இதனால் இங்கு ஓடும் ஆற்று நீரிலும், அருவிகளில் கொட்டும் நீரிலும் குளிக்கும்போது மனிதர்களுக்கு உள்ள பல்வேறு உடல்நல பாதிப்புகள் நீங்குகின்றன.

கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 4 கோடியே 28 லட்சம் பேர் தமிழகத்திற்கு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். வரும் ஆண்டுகளிலும் சுற்றுலாத்துறையில் தமிழகம் முதலிடத்தை பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு ஆடிபெருக்குவிழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள பல்துறை பணிவிளக்க கண்காட்சியை திறந்து வைத்து பேசியதாவது:- மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தர்மபுரி மாவட்ட வளர்ச்சிக்கு பொறியியல் கல்லூரி, உறுப்பு கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, பாலக்கோட்டில் கலை அறிவியல் கல்லூரி, தர்மபுரியில் சட்ட கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது மாணவர்களின் நலன்கருதி பாலக்கோடு கலை அறிவியல் கல்லூரியில் 8 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் 132 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.49 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள். இதில் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.வி.ரெங்கநாதன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மதியழகன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியம், கூட்டுறவு பண்டகசாலைதலைவர் செங்கோடன் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாரதிதாசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்